சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ இலங்கையை ஒட்டிய தென்மேற்க வங்கக்கடல் பகுதிகளில் (3.1 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியில் 19 செ.மீ., சிவகங்கை, மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் தலா 12 செ.மீ., திருச்சி மாவட்டம் அணை பகுதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தலா 11 செ.மீ., ஈரோடு மாவட்டம் பவானி, பெரம்பலூரில் தலா 10 செ.மீ., மழை பெய்தது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தின் ஆர்.எஸ்.மங்களம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள் :
இன்று தெற்கு வங்கக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை மற்றும் 3-ந் தேதியில் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னா் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று இரவு முதல் பெய்து வந்த கனமழையால், இன்று நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிப்பாளையத்தின் சாலைகள் முழுவதும் வெள்ளம்போல மழைநீர் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், அந்த பகுதியில் இருந்த பாலத்தில் சென்ற சில வாகனங்கள் மழை நீரில் சிக்கியதால், அவர்களை தீயணைப்பு மீட்பு படையினரும், காவல்துறையினரும் மீட்டனர்