அந்தமான் தீவுகளுக்கு அருகில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரங்களில் இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதம் முழுவதும் பல்வேறு காற்று அழுத்தத் தாழ்வு மண்டலங்கள் நிகழ இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போது இலங்கைக்கு அருகில் நீடித்து வரும் இந்தக் காற்று சுழற்சி இன்று காலையில் வலுவிழந்ததோடு, வலுகுறைந்த காற்று சுழற்சியாக மாறியுள்ளது. இது விரைவில் முற்றிலுமாக செயலிழந்து விலகும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் கேரளா அருகில் நிலை கொண்டிருந்த காற்று சுழற்சி, மேற்கு, வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து சென்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதோடு, வடக்குத் திசை நோக்கி நகர்ந்து, குஜராத் பகுதிக்குச் சென்று கரையைக் கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தெற்குச் சீனக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தம் கடந்த நவம்பர் 29 அன்று இரவு தாய்லாந்து வளைகுடாப் பகுதிக்கு நுழைந்து, நவம்பர் 30 அன்று அதிகாலையில் தாய்லாந்துக்கும், மலேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிலை கொண்டிருந்தது. உயர் அழுத்தம் காரணமாக நவம்பர் 30 அன்று இரவு அது தெற்கு அந்தமான் தீவுகளின் கடல் பகுதிக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமானின் தெற்குப் பகுதியை வரும் டிசம்பர் 1 அன்று அது கடந்த பிறகே, அது வங்கக் கடல்பகுதிக்கு வரும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தெற்கு ஆசியப் பகுதியின் பல்வேறு பகுதிகளின் நில அமைப்புகளையும் அவற்றின் வானிலை மாற்றங்களை நீண்ட காலம் ஆய்வு செய்ததன் அடிப்படையிலும், அந்தமான் பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்குத் திசையை நோக்கி நகர்ந்து வந்து, பின்னர் மீண்டும் மேற்குத் திசை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 30 அன்று, வங்கக் கடல் வழியாக ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரங்களில் மேலும் வலுப் பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், அவ்வாறு மாறும் போது, அது வரும் டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வழியாக அரபிக் கடல் நோக்கி செல்லும் எனக் கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள சூழல், தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரையிலான நாள்களில் வெயில் நிலவ வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது ஏற்படுத்தும் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் மழை பெய்யும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் உள்ள பகுதிகள், தென் மாவட்டங்கள் ஆகியவற்றில் கன மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் மழை இருக்காது எனவும், டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தெற்கு அந்தமான் தீவுப் பகுதியில் புதிதாக அடுத்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி, அது டிசம்பர் 9ம் தேதி அன்று மேற்குத் திசை நோக்கி நகர்ந்து டிசம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் மழையை ஏற்படுத்தும் வாய்ப்புள்லதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு டிசம்பர் 15 அன்று வரை மழை பெய்யாமல், டிசம்பர் 16 முதல் டிசம்பர் 22 வரையிலான நாள்களில் மீண்டும் புதிய காற்றழுத்தம் ஏற்பட்டு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
மேலும், டிசம்பர் 26 அன்றுக்குப் பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 ஆகிய தேதிகள் வரை மழை பெய்யும். எனவே இந்த மாதம் முழுவதும் காற்றழுத்தத் தாழ்வுநிலைகளையும், அதி தீவிர மழையும் வழக்கத்திற்கு மாறாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.