கரூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை.


மேலடுக்க சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்திருந்த நிலையில், அதிகாலை 4 மணியளவில் மாவட்டம் முழுவதும் லேசான அளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, மாவட்டத்தின் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டதோடு, காலை முதல் இரவு வரை மழை பெய்யாவிட்டாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான நிலை நிலவியதால் மக்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர்.



 


மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு.


காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்தது. வினாடிக்கு 2,954 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 113 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு 14,593 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 1,520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 264 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 34 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 33.95 அடியாக உள்ளது. க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையில் 23.94 அடிக்கு தண்ணீர் உள்ளது.





மழை, கடும் பனிப்பொழிவு கோரை அறுவடை நிறுத்தம்; விவசாயிகள் பாதிப்பு.


கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிப்பொழிவு இருப்பதால், கோரை அறுவடை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, அறுவடை செய்த கோரையை உலர்த்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில், வாங்கல், என்.புதூர், பிச்சம்பாளையம், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, நெரூர் மரவாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோரை பயிர் அதிகமான அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் கோரைகளை உலர்த்தி, பாய்கள் தயார் செய்யப்படுகின்றன. மேலும், கான்கிரீட் அமைக்கவும், திரைச்சீலை, நாற்காலிகள் செய்யவும், கோரை பயன்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக போதிய விலை கிடைக்காமல் கோரை அறுவடை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மழை காரணமாக கோரை அறுவடை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை காரணமாக கோரை அறுவடை பாதிக்கப்பட்டது.


தற்போது, மழையை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால், அறுவடை செய்யப்பட்ட கோரையை உலர்த்த முடியாமல் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர். இது குறித்து நெருரைச் சேர்ந்த கோரை பயிர் விவசாயிகள் கூறியதாவது, கரூர் பகுதியில் தற்போது அதிக அளவில் மேகமூட்டம் மற்றும் பனிப்பொழிவு உள்ளது. காலை 8 மணி வரை பனியின் தாக்கம் உள்ளது. இதனால், கோரை பயிரை அறுவடை செய்ய முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால், நிறம் மாறிவிடும் சில பகுதிகளில் அறுவடை செய்வதை விவசாயிகள் நிறுத்தியுள்ளனர். வரும் தை மாதம் முதல் ஆவணி மாதம் வரை திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் அதிக அளவில் நடக்கும். அந்த சமயத்தில் கோரை பாய்க்கு கிராக்கி ஏற்படும். பனிப்பொழிவு குறைந்தால் தான், அறுவடையை துவங்க முடியும். தற்போது பணிகள் தடைபட்டுள்ளதால், கோரை விவசாயிகளுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.