TN ELECTION: தயாராகும் தமிழகம்.! தூசி தட்டப்படும் இவிஎம் இயந்திரங்கள்- தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகள் முன்னிலையில் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி முதல் சோதனை செய்யும் பணி தொடங்கப்படவுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு பக்கத்தில் அரசியல் கட்சிகள் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்க தயாராகி வருகிறது. மறு பக்கம் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இதனிடையே வாக்காளர் சிறப்பு திருத்த பணியானது நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வாக்காளர்கள் 77 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீக்க இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் BLOக்கள் கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க டிசம்பர் 11ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் நியமனம்
இதனையடுத்து புதிதாக வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும், அதில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்த்து கொள்ள விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இதனிடையே தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்களின் முதல் நிலை சரி பார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கப்படவுள்ளது.
இந்தநிலையில் தமிழக தலைமைச் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் 1 லட்சத்து 50 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி வி பேட் இயந்திரங்கள் ஆகியவற்றை முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அடுத்த வாரம் 11ம் தேதி முதல் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 11ஆம் தேதி முதல் இவிஎம் சோதனை
தமிழகத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்திய வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்துள்ள கிடங்கில் இருந்து எடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதல் இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படும் பட்சத்தில் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் இருந்து இவிஎம் இயந்திரங்களை பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.





















