தமிழ்நாடு முழுவதும் அதிகம் பேசுபொருளாகி வரும் வார்த்தை எஸ்ஐஆர் Special Intensive Revision (SIR). வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பதன் சுருக்கமே இது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக இதைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதன்மூலம் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் வெளியேற்றப்படும் சூழல் உருவாகி உள்ளதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் சிறப்பு தீவிர திருத்தம் களைகளை நீக்க மட்டுமே என்று தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இந்த செயல்முறை எப்படி நடைபெறும்? இதில் எழும் சந்தேகங்கள், பிரச்சினைகள் என்ன? எப்படி கையாள வேண்டும்? முக்கிய தேதிகள் குறித்து பார்க்கலாம்.
- BLO எனப்படும் பூத் அதிகாரி வாக்காளர் அனைவரது இல்லங்களுக்கும் வந்து, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித் தனியாக, வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண், புகைப்படத்துடன் கூடிய = கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவார்.
- ஒரு வாக்காளருக்கு இரண்டு படிவம் வழங்குவார். அதில் ஒன்றை நிரப்பி கொடுத்தால் போதும். தவறு ஏதும் ஏற்பட்டிருந்தால், இன்னொரு படிவத்தை சரியாக நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
- படிவத்தில், தங்களுடைய பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், கணவர் பெயர் அல்லது மனைவி பெயர் உள்ளிட்ட தகவல்களை எழுத வேண்டும். ஆதார் கார்டு எண் இருந்தால், அதையும் எழுத வேண்டும்.
- அதற்கு அடுத்த கட்டத்தில், 2002 வாக்காளர் பட்டியலில், தங்களது ( சம்பந்தப்பட்ட வாக்காளர் ) பெயர் இருப்பின், அந்த பட்டியலில் உள்ள வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
- தங்களது பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால், தங்களுடைய ( வாக்காளரது ) தந்தை அல்லது தாய், உறவினர் பெயர் இருப்பின், அவர்களது வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றைத் தெளிவாக எழுதவேண்டும்.
- 2002 வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் அல்லது தாய், தந்தை பெயர் இருக்கிறதா என்பதை, BLO அதிகாரி வைத்திருக்கும் மொபைல் செயலி, வழியாக பார்த்துகொள்ளலாம். அதில் உள்ள, தகவலின் அடிப்படையில், வாக்களர் வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றை படிவத்தில் நிரப்பி கொள்ளலாம்.
- தங்களுக்கு 2002 ல் வாக்காளர் பெயர் இல்லையென்றால் அந்த கட்டத்தில் இல்லை என்று எழுதவேண்டும். தங்களது தாய்,தந்தை ஆகியோருக்கும் இல்லை என்றாலும், அடுத்த கட்டத்தில், இல்லை என்று எழுதவேண்டும்.
- பின்பு படிவத்தில் கையெழுத்து இட்டு கொடுக்க வேண்டும்.
- 2002 என்பது, மீண்டும் வாக்குகளை பெறுவதற்கான கூடுதல் பயன்தானே தவிர, அதில் இல்லாதவர்களுக்கு, வாக்குரிமை வராது என்பதல்ல.
- நிரப்பிய படிவத்தை BLO அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.
BLA 2-க்கான அதிகாரம்
- BLA 2 - இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பாக முகவர். BLO எப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அதிகாரியோ, அதுபோல் BLA 2 சம்பந்தப்பட்ட கட்சியின் அதிகார்பூர்வ நபர்.
- BLO கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளரிடம் வழங்கும்போது, அவர்களுடன் BLA 2 செல்லலாம். அதற்கான அதிகாரம் இருக்கிறது.
- எழும் சந்தேகங்கள் எதுவாகினும், BLO-இடம், BLA 2 கேட்கலாம். அதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை BLO விடம் உள்ளது.
- ஒரு BLA 2 ஒரு நாளைக்கு 50 கணக்கெடுப்பு படிவங்களை, BLO அதிகாரியிடம் சமர்பிக்கலாம்.
- நமது வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்கள், நம்முடைய கட்சி சார்ந்த வாக்காளர்களுக்கு இதில் சிரமம் இருந்தால் BLA 2 சரிசெய்யலாம்.
- தினமும் எத்தனைபடிவம் கொடுத்துள்ளீர்கள், எத்தனை படிவம் பெற்றுள்ளீர்கள், இன்றைக்கு எந்த பகுதிக்கு செல்கிறீர்கள் உள்ளிட்ட தகவல்களை, BLO-இடம், கேட்பதற்கான அனைத்து அதிகாரமும் BLA 2 விற்கு இருக்கிறது.
- வெளி மாநிலத்தவரைச் சேர்ந்தவர்கள் என்றால், அவர்களது சொந்த ஊரில் ஓட்டை நீக்கியதற்கான சான்றை NOC ஐக், காட்டுங்கள் என அலுவலர்களிடம் கேட்கலாம்.
சந்தேகங்கள்
- BLO அதிகாரி வரும்போது, ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருந்து, ஒருவர்தான் வீட்டில் இருக்கிறார் என்றால், அந்த ஒருவரே, மீதியுள்ள 4 நபர்களின் படிவங்களை வாங்கலாம்.
- வீடு பூட்டியிருந்தால் ஒரு வீட்டிற்கு மூன்று முறை BLA 2 வரவேண்டும்.
- குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் சென்றாலோ, படிக்கச் சென்றாலோ வீட்டில் உள்ளவர்கள் படிவங்களை நிரப்பலாம்.
- 2002 வாக்காளர் பட்டியலை வைத்து கணக்கெடுப்புப் படிவத்தை வழங்க மாட்டார்கள். அக்டோபர் 2025 பட்டியலை வைத்துத்தான் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவார்கள்.
- கணக்கெடுப்பு படிவத்தை கொடுக்கும்போது, ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஓட்டை நீக்கினால்தான் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அந்த அதிகாரி கேட்கும்போது சமர்பிப்க்க வேண்டும்.
எந்த வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்?
- மூன்று முறை ஒரு குடும்பத்திற்குச் சென்றும், அந்த வாக்காளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்த வாக்காளரை நீக்குவார்கள்.
- தவறாக தகவல்களை நிரப்பிக் கொடுத்தால் நீக்குவார்கள்.
- இறந்தவர், இரு ஓட்டு, போலி வாக்காளர் - ஆகியவற்றை நீக்குவார்கள்.
தேதிகள்
* வீடு வீடாக அதிகாரி வரும் காலம் : நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை.
* வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - டிசம்பர் 9
* ஆட்சேபணைக் காலம் - டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை
* தேர்தல் ஆணையம், ஆட்சேபணை மனுக்களை விசாரிக்கும் காலம் : டிசம்பர் 9 முதல் ஜனவரி 31 வரை
* இறுதி வாக்காளர் பட்டியல் : பிப்ரவரி 7
இறுதிப் பட்டியலில் உங்களது பெயர் இல்லையென்றால், 2026-ல் ஓட்டு போட முடியாது.
ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அணுகலாம் அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.