நகைச்சுவை என்பது சிரிக்க மட்டும் அல்ல...சிந்திக்க வைக்கவும் அவசியம் என்பதை என் கல்லூரி காலங்களில் உணர வைத்தவர் விவேக்.  அறிந்தோ அறியாமலோ மூடநம்பிக்கையினாலும் அறியாமையினாலும் செய்கிற தவறுகளை தன் முற்போக்கான நகைச்சுவை வசனங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.
ரன், காதல் மன்னன், பாளையத்து அம்மன், படிக்காதவன், உத்தமபுத்திரன் என நிறைய படங்களை உதாரணம் சொல்லலாம். 


'ஏன்டா உள்ளுக்குள்ள இருக்குற 750 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டி இத்துனூண்டு எலுமிச்சம் பழத்துல ஓடுமாடா? - சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்த காலம் அது. ஒரு பழத்தை நம்பாமல் ஒழுங்கா டிரைவிங் கத்துக்கிட்டு வண்டிய ஓட்டுங்கடா என்று மூடநம்பிக்கையை முகத்தில் அறைந்து சொல்லியிருப்பார்.


'காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் வராமா உன்னிக்கிருஷ்ணன் குரலா வரும்?' என்றொரு நகைச்சுவை. இப்போதும் நடக்கிற உணவுக்கலப்படம் குறித்த விழிப்புணர்வை அப்போதே சுட்டிக்காட்டியிருப்பார்.


'யாரோ என் இடுப்புல ஜிப்பு வைச்சு தச்ச மாதிரி இருக்கே... என்னது என் கிட்னியை உருவிட்டாங்களா?' - கிட்னி திருடர்கள் எச்சரிக்கை என்கிற  மணியை கார்பரேட் மருத்துவமனைகளின் கைக்கூலிகளுக்கு புரிகிற மாதிரி பொதுமக்களை உஷார் படுத்தியிருப்பார்.


'டேக் டைவர்ஷன் டேக் டைவர்ஷனு திருப்பதிக்கே கொண்டு வந்து விட்டுட்டாங்களேடா' - மாநகராட்சி சாலைகளில் அடிக்கடி குழி தோண்டி வைத்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை சுட்டிக் காட்டுவதாக இருக்கும் இந்த நகைச்சுவை. கூடவே வேலையில்லா திண்டாட்டம், தனியார் நிறுவனங்களின் வகைவகையான நேர்காணல்கள் என அன்றைய இளைஞர்களுக்கு கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது என்பதையும் போகிற போக்கில் சொல்லியிருப்பார்.


விவேக்- தனுஷ் கூட்டணி நகைச்சுவைகள் வேறு தளத்தில் இருக்கும். படிக்காதவன் படத்தில் டான் பாத்திரமாக வரும் விவேக் பேசும் ஒவ்வொன்றும் அதிரடி பட்டாசுகள். 
' அண்ணே எங்களுக்கெல்லாம் என்ன செய்ய போறீங்கன்னு கேட்டதும் ' இதுவரைக்கும் உங்க எல்லாருக்கும் என்ன செஞ்சேனோ ...அதான்டா இனிமேலும்' என்பார். மறைமுகமாக இது ஆட்சியில் ஆள்பவருக்கும் மக்களுக்குமான குறியீடு. 




ஜவஹர் சார் இயக்கத்தில் வந்த உத்தமபுத்திரன் படத்தில் விவேக் தன் தனித்துவத்தைக் காட்டியிருப்பார். பேங்கில் பணத்தைப் பறிகொடுக்கும் அப்பாவி ஆடிட்டர் எமோஷனல் ஏகாம்பரமாகவே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பார். 


எல்லாவற்றையும் விட பாளையத்து அம்மன் படத்தில் வரும் பராசக்தி வசனம் மிக முக்கியமானது. 


' உடான்ஸ் சாமியாரை உதைத்தேன். ஏன்? அவன் ஆடும் டப்பாங்குத்து பிடிக்கவில்லை கும்மாங்குத்து ஆட சொல்லியா? டான்ஸ் என்ற பெயரால் தன் பேங்க் பேலன்ஸை ஏற்றிக் கொண்டிருக்கிறானே.. அதைத் தடுப்பதற்காக!' - இப்படி நீளும் அந்த வசனம் அரசையும், போலிகளையும் மக்களின் மூட நம்பிக்கைகளையும் நார் நாராகக் கிழித்தெறியும். என் கல்லூரி நாட்களில் இந்த வசனத்தை மட்டும் ஒலிநாடாவில் பதிவு செய்து தனிநபர் நாடகப் போட்டிகளில் கலந்து கொண்டதை இப்போதும் என்னால் மறக்க முடியாது. 


இவை மட்டும் அல்ல.. எய்ட்ஸ் விழிப்புணர்வு, ஆணுறையின் அவசியம், குடும்பக்கட்டுப்பாடு, இயற்கையை பாதுகாப்பது, சாதி மாதங்களில் நிகழும் மூட நம்பிக்கை, கள்ளிப்பால் ஊற்றிக் பெண் சிசுக்களை கொன்ற காலத்தில் பெண் குழந்தைகள் குறித்தப் புரிதல், பெண்களை வன்புணர்வு செய்துவிட்டு கமுக்கமாக கட்டப்பஞ்சாயத்து செய்த இடத்தில் ' மைனர் குஞ்சை சுட்டுட்டேன்' என்றெல்லாம் காலத்துக்குத் தேவையான காலத்துக்கும் தேவையான விழிப்புணர்வு நகைச்சுவைகளைக் கொடுத்தவர் விவேக். 


இப்போதும் கூட அவர் மரணம் குறித்த வதந்திகள் எதுவானாலும் அது மருத்துவபூர்வமாக நிரூபிக்கப்படாத வரை ஒருநாளும் அவர் ஆன்மா அதை அனுமதிக்கப் போவதில்லை.


இவர் நம் காலத்தின் விழிப்புணர்வு. விழிகள் மூடினாலும் அவர் நகைச்சுவைகள் மூடநம்பிக்கையால் மூடிய விழிகளை இனி எப்போதும் திறந்து வைக்கும்.


இரங்கல்கள் விவேக் ❤️


-பொன் விமலாவின் பேஸ்புக் இரங்கல் பதிவு