நான்காவது மாபெரும் விருதுநகர் புத்தகத் திருவிழா-2025- யினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

புத்தக திருவிழா
 
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில்  மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, "அறிவும் வளமும்"- என்ற பொருண்மையின் கீழ், நடைபெறவுள்ள விருதுநகர் நான்காவது புத்தக திருவிழா-  2025-யினை (14.11.2025 முதல் 24.11.2025 வரை) மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தலைமையில், தொடங்கி வைத்தனர்.
 
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
 
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது...,"எல்லா வகையிலும் எல்லாம் இருக்கிற ஒரு இடமாக ஒரு அறிவு சார்ந்த இடமாக இந்த புத்தகக் கண்காட்சி உள்ளது. ஒரு நல்ல புத்தக கண்காட்சி இங்கே நடக்கிறது. அதை நம்முடைய ஊரைச் சார்ந்த பெருமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.
 
அமைச்சர் தங்கம் தென்னரசு
 
பின்னர், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது...,” ஒரு காலத்தில் சென்னை மாநகரத்தின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாக கருதப்பட்டு, நடத்தப்பட்டு வந்த இந்த புத்தகக் கண்காட்சிகள் இன்று சென்னை மாநகரத்தை தாண்டி தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத் தலைநகரங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஏனைய பெருநகரங நம்முடைய பண்பாட்டு அடிப்படையில் இப்புத்தகத் திருவிழா நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், விருதுநகரின் பண்பாட்டு விழுமியங்களையும், நாகரீகங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை எடுத்துரைக்கும் வெம்பக்கோட்டை அகழ்வாய்வுகள் மற்றும் நம்முடைய இயற்கை வளங்களை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு, இன்றைய தினம் இந்தப் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
 
நூலகங்கள்
 
முன்னே பழமைக்கும், பின்னே புதுமைக்கு ஒரு இணைப்புப் பாலமாகவும், ஸ்டார்-அப் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களிடையே இணைப்புப் பாலமாக அமையும் வகையிலும் இந்தப் புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவரது கையிலே இருக்கக் கூடிய ஆபரணங்களிலே சிறந்த ஆபரணம் யாதென வினாவினால், அது புத்தகம் ஒன்றே. சென்னையிலே பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினையொட்டி, மிகப்பெரிய நூலகம் அமைத்ததைப் போன்று, மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரால் ஒரு நூலகம், கோவையில் தந்தை பெரியாரின் பெயரில் ஒரு நூலகம் அதேபோல நம்முடைய திருச்சியில் ஒரு பிரமாதமான நூலகம் பெருந்தலைவர் உடைய பெயராலே இப்படி நாடெங்கிலும் நம்முடைய அறிவு திருக்கோயில்களை உருவாக்கக்கூடிய மாபெரும் ஒரு சரித்திர சாதனையை நம்முடைய முதலமைச்சர் இன்றைக்கு உருவாக்கி தந்திருக்கிறார். எனவே அத்தகைய புத்தக கண்காட்சிகளை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
கரிசல் இலக்கியம்
 
ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு சிறப்பு இருப்பதைப் போல நம்முடைய விருதுநகர் மண்ணுக்கு இருக்க கூடிய சிறப்பு இந்த மண்தான். கரிசல் பூமியை கொண்டிருக்கக்கூடிய ஒரு மாவட்டம். இந்த மண் தான் கரிசல் பூமியிலிருந்து வந்திருக்கக்கூடிய இலக்கியத்தை எடுத்துச் சொல்லி இருக்கக் கூடிய மாவட்டம்.  இந்த மாவட்டத்திலிருந்து உருவாகி இருக்கக்கூடிய இலக்கியவாதிகள் இன்றைக்கு சாகித்ய அகாடமி விருது பெற்று திகழ்பவர்களாக விளங்கும் மாவட்டம் நம்முடைய விருதுநகர் மாவட்டம். கரிசல் இலக்கியம் என்று ஒரு இலக்கிய மரபை தோற்றுவிக்க கூடிய மாவட்டத்திற்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதிலே நமக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது" என்றார்.