பயணிகள் ரயிலில் விற்பனையாளர் ஒருவர், சமோசா மீது கால் வைத்தப்படி செல்போனில் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ரயில் பயணங்கள், ரயிலில் விற்கப்படும் சூடான சிற்றுண்டிகள் மற்றும் உள்ளூர் உணவுகள் இல்லாமல் பெரும்பாலும் முழுமையடையாது. ஆனால், சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, ரயில் பயணத்தின்போது உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் பெட்டி வாசலுக்கு அருகில் தரையில் அமர்ந்துகொண்டு, பயணிகளுக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படும் சமோசா கூடையின் மீது தனது கால்களை வைத்தபடிசமோசா விற்பனையாளர் செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கிறார். பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் விரைவாகப் பரவி, இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த பலர், ரயில்களில் உள்ள சுகாதாரத் தரநிலைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய நிலையில், மற்றவர்களோ ரயிலுக்குள் அனுமதியின்றி வியாபாரிகள் சுதந்திரமாகச் செயல்படுவது குறித்துக் கவலை தெரிவித்தனர்.
இந்த வீடியோ தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை தொடங்கினர். பின்னர் அதிகாரிகள், மே 20 முதல் மே 22 வரை 12809-10 என்ற தொடர்வண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வீடியோவில் காணப்படும் நபர் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே உணவு வழங்கும் பணியாளர் இல்லை என்று தெளிவுபடுத்தினர். இருப்பினும், இந்த விளக்கம் பயணிகளிடையே இருந்த கவலைகளைப் போக்கப் பெரிதாக உதவவில்லை. தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதாக தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக தற்போது தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட உரிமைதாரருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரயிலில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத உணவு விற்பனையாளர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது சட்டவிரோத உணவு விற்பனையாளர்கள் குறித்து உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் தெரிவிக்குமாறு ரயில்வே ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத உணவு விற்பனையைத் தடுக்கவும், பயணத்தின்போது பயணிகளின் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தவும் கடுமையான கண்காணிப்பு தொடரும் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர்.
