சென்னையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் பெருநகர காவல்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 


விநாயகர் சதுர்த்தி திருவிழா 2023


இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த பண்டிகை நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவானது நடப்பாண்டு புரட்டாசி மாத பிறப்பன்று வருவதால் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. பொதுவாகவே எந்த ஒரு செயலையும் நாம் விநாயகரை வணங்கி விட்டு செய்வது வழக்கம் என்னும் நிலையில், இந்த நன்னாளில் அவருக்கு பிடித்த கொழுக்கட்டை தொடங்கி அனைத்து உணவுகளையும் படைத்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம். 


இதேபோல் அனுமதி பெறப்பட்டு, அனைத்து கோயில்களிலும் விநாயகர் சிலைகள் இன்று வைக்கப்பட்டு வார இறுதி நாளில் நீர்நிலைகளில் கரைக்கப்படும். பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்புகள் 


இப்படியான நிலையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் பெருநகர காவல்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 


அதன்படி, 



  • விநாயகர் சிலைகள் நிறுவப்படும் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை அல்லது அரசுத் துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

  • விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதை உறுதிசெய்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் அனுமதி பெறவும்.

  • தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் போன்றவற்றில் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  • வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகே சிலைகளை நிறுவுவது தவிர்க்கப்பட வேண்டும்.

  • நிறுவப்படும் சிலையின் உயரம் மேடையின் அடிப்பகுதியில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு தன்னார்வலர்கள் 24 மணி நேர சுழற்சியில் நியமிக்கப்பட வேண்டும்.

  • மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் கூச்சலிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் இடமளிக்கக் கூடாது.

  • வழிபாட்டுத் தலத்தில் அரசியல் கட்சிகள் அல்லது மதத் தலைவர்களுக்கு ஆதரவான பேனர்கள்/விளம்பரப் பலகைகள் வைக்கக் கூடாது.

  • தீ பாதுகாப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், மின் கம்பி இணைப்புகள்; விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க பந்தல்களை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

  • விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதித்த நாட்களில், அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

  • விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் வழிகள் மற்றும் கரைக்கும் இடங்கள் ஆகியவற்றில் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.