விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில், ஜூலை 31ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம் - திருப்பதி ரயில்:
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,
தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக விழுப்புரம் - திருப்பதி இடையேயான ரயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருப்பதி (வ.எண் 16854) முன்பதிவில்லா விரைவு ரயில், ஜூலை 1 முதல் 31ம் தேதி வரை காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். எதிர் வழித்தடத்தில், திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16853), திருப்பதி -காட்பாடி இடையே ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் - திருப்பதி வரை செல்லும் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பால் பயணிகளும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.