விழுப்புரம் : திண்டிவனம் வட்டம் வீடூர் அரசு மேல்நிலைப் பள்ளி, மயிலம் ஊராட்சி ஒன்றியம் தழுதாளி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் கடன் உதவி பெற்று செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் அலகினையும், விளங்கம்பாடி ஊராட்சியில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் மானூர் ஊராட்சியில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் மானிய திட்டத்தில் அமைக்கப்பட்ட சிறுதானிய மதிப்பு கூட்டு மையம் ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Continues below advertisement

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,

திண்டிவனம் வட்டம் வீடூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு, அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதோடு, மாதாந்திர மற்றும் வாராந்திர தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து கேட்டறியப்பட்டது.

Continues below advertisement

மேலும், வீடூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களின் கல்வி வசதியை மேம்படுத்தும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் மற்றும் மாணவர்களுக்கான கழிப்பறைகள் கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி கற்க பாதுகாப்பான, தரமான வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. எனவே கட்டுமானப் பணிகளை உரிய தரத்துடனும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, மயிலம் ஊராட்சி ஒன்றியம் தழுதாளி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் கடன் பெற்று ஏர்முனை மகளிர் சுய உதவிக்குழுவினை சேர்ந்த உறுப்பினர் செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் அலகினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், செக்கு இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் உற்பத்திப் பணிகள் மற்றும் எண்ணெய் வகைகள் குறித்தும், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாடு, உற்பத்தித் திறன், சந்தைப்படுத்துதல் மற்றும் வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் குறித்து கேட்டறியப்பட்டது. சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள், பயிற்சிகள் மற்றும் வங்கி கடனுதவிகள் போன்றவைகள் ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைதொடர்ந்து, மயிலம் ஊராட்சி ஒன்றியம் விளங்கம்பாடி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் (PMKSY-PDMC) 2026 - 2027-ன் கீழ் காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், விளங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனது நிலத்தில் ரூ.1,27,129/- மதிப்பீட்டில் அரசு மானிய உதவியுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், விவசாயிகளின் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை உயர்த்திட வழிவகை செய்யப்படுகிறது.

மேலும், நுண்ணீர் பாசனத் திட்டத்தின் பயன்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் மானூர் ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் ரூ 14.80 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்ட சிறுதானிய மதிப்பு கூட்டு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, அந்தப் பயனாளி கேட்டுக்கொண்டவாரு வருடம் முழுதும் சிறுதானிய தானியங்கள் கிடைத்திடவும், அரசு அலுவலக கூட்டங்களில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விநியோகம் செய்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.