விழுப்புரம் : விழுப்புரம் அருகே மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தத்தப்பட்டது.
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சியில் இருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, இன்று காலை விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கன்டெய்னர் லாரியின் முன்புறம் மேம்பாலத்திற்கு மேலிருந்து கீழே தொங்கியபடியும், லாரியின் மற்ற பாகங்கள் மற்றும் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பேப்பர் பண்டல்கள் மேம்பாலத்தில் சிதறியது.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
இதனால் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாகவும், திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாகவும் என இருத்திசைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருப்புறத்திலும் சுமார் 10 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதுகுறித்து தகவலறிந்ததும் விழுப்புரத்தில் இருந்து போலீசாரும், நகாய் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மேம்பாலத்தில் குறுக்கே கவிழ்ந்துள்ள கன்டெய்னர் லாரியையும், சாலையில் சிதறி கிடக்கும் பேப்பர் பண்டல்களையும் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சம்பவம் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருப்புறத்திலும் போக்குவரத்தை போலீசார் முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வழித்தடத்தில் மாற்றுப் பாதையும் இல்லாததால் போக்குவரத்தை வேறு பாதையில் திருப்பி விடவும் சாத்தியமில்லாத காரணத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது போக்குவரத்து முடங்கியுள்ளது