திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்கிறார். உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் மார்ச் 6ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ள சனிப்பெயர்சி விழாவை முன்னிட்டு அங்கு பல்வேறு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகித்தனர் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது புதுச்சேரி மாநில அரசு.
இந்த நிலையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை ஒட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மார்ச் 6, 7ஆகிய தேதிகளில் விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்றும் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பகல் 1.05 மணிக்கு நாகை சென்றடையும்; மறுமார்க்கமாக பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே எக்ஸ் தளப்பக்கத்தில், திருநள்ளாரில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின்போது எதிர்பார்க்கப்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை நிர்வகிக்க விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே மார்ச் 06 மற்றும் 07 (வெள்ளி & சனிக்கிழமை) முன்பதிவு செய்யப்படாத சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படும். இந்த கூடுதல் சேவைகள் புனித நகரத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு சீரான, வசதியான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உங்கள் பயணத்தைத் திட்டமிட்டு தெற்கு ரயில்வேயுடன் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
