தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் அல்ல, திமுக உறுப்பினர் தான் என விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவி குமார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி தான் மதிமுக உறுப்பினர் அல்ல, திமுக உறுப்பினர்தான் என சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் ரவி குமார் எம்.பி தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரிவேந்தர், மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் கொங்கு நாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோர் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேபோல தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ண மூர்த்தி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.
இதையடுத்து, மாற்று கட்சியினர் வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டத்திற்கு புறம்பானது, வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றி செல்லாது என வேண்டுமென தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் திமுக, அதிமுக கட்சியின் சின்னங்களில் போட்டியிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பாரிவேந்தர், சின்னராஜ், கணேச மூர்த்தி, ரவிகுமார், மற்றும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தென்காசி தனித்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த நவம்பர் 2019ல் பதிலளித்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தான் மதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்துவிட்டதாக பதிலளித்திருந்தார்.
இதையடுத்து தனது பிரமாணப் பத்திரத்தில், ரவிக்குமார் எம்.பியும் கணேச மூர்த்தி எம்.பியின் அதே நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். மேலும் அதில், வெற்றிபெற்ற நான்கு எம்.பிக்கள் மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர் குற்றவாளி என்று வழக்குரைஞர் கருதினால், முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விசிக உறுப்பினர் ஒருவர் திமுக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக தவறான அனுமானங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மார்ச் 2019 அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது தான், திமுகவின் உறுப்பினராகத்தான் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ரவிக்குமார் எம்பி பதில் அளித்திருக்கிறார்.