விழுப்புரம்: விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில், மதுபோதையில் காரின் கண்ணாடியை உடைத்தும், நடுரோட்டில் வாகனங்களை மறித்தும் பொதுமக்களுக்குக் கடும் இடையூறு ஏற்படுத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள கருங்காலிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஜய். இவர் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் தீவிரமாக மது அருந்திவிட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் விழுப்புரம் நோக்கிப் புறப்பட்டுள்ளார். பேருந்து சென்று கொண்டிருந்தபோதே, மதுபோதையில் இருந்த அஜய் பேருந்து நடத்துநர் மற்றும் பயணிகளுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர், தமிழக எல்லையான கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே அஜயைக் கீழே இறக்கிவிட்டுள்ளார்.
நடுரோட்டில் வெறியாட்டம்!
பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆத்திரத்தில், அஜய் சாலையில் வந்த மற்ற பேருந்துகளை மறிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த அங்குப் பணியில் இருந்த மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர், அவரைத் தடுத்துக் கண்டித்துள்ளனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த அஜய், போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் வேகமாக வந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்தார். அதுமட்டுமன்றி, அவ்வழியாகச் சென்ற பிற வாகனங்களையும் மறித்து, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுப் பெரும் இடையூறை ஏற்படுத்தினார்.
போலீசார் அதிரடி நடவடிக்கை
சம்பவ இடத்தில் நிலைமை கைமீறிச் சென்றதால், மதுவிலக்கு பிரிவு போலீசார் உடனடியாக வளவனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் காவல்துறையினர், நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட அஜயை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் வாலிபர் ஒருவர் காரை உடைத்து சாலையில் வெறியாட்டம் ஆடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
