விழுப்புரம்: விழுப்புரம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு, பாம்புக்கடி மருந்து இருப்பு வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.
யூரியா தட்டுப்பாடு மற்றும் கட்டாயம்:
மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதாகவும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் அது கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். குறிப்பாக, கூட்டுறவு சங்கங்களில் ஒரு மூட்டை யூரியா வாங்கினால் 10 கிலோ குருணையை கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்துவதாகக் குற்றம் சாட்டினர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்:
டிசம்பர் மாதத்திற்குள் மாவட்டத்தில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் பிரதானமாகக் கோரிக்கை வைத்தனர். கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்றும், அவ்வாறு திறந்தால் மட்டுமே விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வலியுறுத்தினர்.
பட்டா மாற்றம் மற்றும் ஏரி ஆக்கிரமிப்பு:
பட்டா மாற்றம் தொடர்பான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு சிறப்பு தாசில்தாரை நியமிக்க வேண்டும் எனக் கோரினர். மாவட்டத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, கொள்ளார் ஏரி ஆக்கிரமிப்பின் பெரும்பகுதி இன்னும் அகற்றப்படவில்லை என்றும், பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.
பாம்புக்கடி மருந்து மற்றும் நிவாரணம்:
விவசாயிகள் கூட்டத்தில் உணர்வுபூர்வமாகக் கிளம்பிய முக்கியமான கோரிக்கை, பாம்புக் கடிக்கு உரிய மருந்துகள் குறித்ததாகும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக் கடிக்குத் தேவையான மருந்துகளைப் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். சில மருத்துவமனைகளில் மருந்து இல்லாததால் விவசாயிகள் உயிரிழப்பதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறினர். மேலும், பாம்புக் கடித்து விவசாயிகள் இறந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகையான ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் போதுமானதாக இல்லை என்றும், அதை ₹10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கடன் வழங்குவதில் சிக்கல்கள்:
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், பயிர்க்கடன் ஆகியவை சரிவர வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர்.
நகைக்கடன் வைத்தால்தான் பயிர்க்கடன் வழங்க முடியும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தனர்.
கரும்புக்கு ₹50,000 வரை கடன் வசதி ஏற்பாடு செய்வதாகக் கூறினாலும், முண்டியம்பாக்கம் ஆலையில் ₹35,000-க்கு மேல் பரிந்துரைப்பதில்லை என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
அணைக்கட்டு பணிகள் தாமதம்:
எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இடதுபுறமுள்ள வாய்க்கால்களில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தப் பணிகள் முடிக்கப்படாததால், ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் 15 ஏரிகளுக்கு நீர்வரத்து தடைப்பட்டுள்ளதாகவும் கூறினர். எனவே, பணியை விரைந்து முடித்து வாய்க்கால்களில் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.