விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், குழந்தைகளை பாதுகாப்பதற்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம், ஆதரவற்ற மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் மூலமாக, குழந்தைகள் பாதுகாப்பு, நலன், உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பணிகள் இடம் பெறுகின்றன.
மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ், குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீதான எந்தவொரு அத்துமீறலும் அவசரமாக கண்டறிந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தத்தெடுக்கும் திட்டம் மற்றும் நிதியுதவி:
18 வயதிற்குட்பட்ட ஆதரவற்ற மற்றும் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை தற்காலிகமாக பராமரிக்கவும், சட்டரீதியான தத்தெடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களை சட்டப்படி பதிவு செய்து கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கடந்த மாதம் (செப்டம்பர்) 15ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கிய “அன்புக் கரங்கள்” திட்டத்தின் கீழ், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்ட ஒற்றைப் பெற்றோர் கொண்டவர்கள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 207 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
- குழந்தை திருமணங்களை தடுக்கும் நடவடிக்கைகள்
- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சட்ட உதவி
- குழந்தை தொழிலாளர் மீட்பு நடவடிக்கைகள்
- காணாமல் போன அல்லது கடத்தப்படும் குழந்தைகளை கண்டறியும் முயற்சிகள்
- குழந்தை நல குழுமம், இளைஞர் நீதிக் குழுமம், தொட்டில் குழந்தை திட்டம் ஆகியவை மூலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள்
துறை இடையிலான ஒருங்கிணைப்பு:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்துகிறது. இதில் கல்வி, சுகாதாரம், சமூக நலன், ஊரக வளர்ச்சி, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, ரயில்வே போலீஸ், சைல்டு லைன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.
தொடர்புக்கான தகவல்:
மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலகம், பெருந்திட்ட வளாகம், விழுப்புரம்தொலைபேசி எண் : 04146 – 290659மின்னஞ்சல் : [dcpuvpm2@gmail.com] (mailto: dcpuvpm2@gmail.com)அவசர உதவி எண்: 1098
பொதுமக்களுக்கு அழைப்பு:
பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், கடைவீதிகள் போன்ற இடங்களில் ஆதரவின்றி பரிதவிக்கும் குழந்தைகளைப் பார்த்தால், உடனடியாக காவல்துறை அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தருமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்கான நலத்திட்டங்கள் முழு வீச்சில் செயல்படுகின்றன, அதிகாரம் இல்லாத குழந்தைகளுக்கு ஆதரையாக “அன்புக் கரங்கள்” திட்டம் – பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்: 1098