உலக  தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.


கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில்  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் கிராம ஊராட்சி திருமுக்கூடலூரில்  நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கிராமசபை கூட்டத்திற்கு சோமூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ஜி.செந்தில்குமார் அவர்கள் தலைமை வகித்தார்.


 




 


உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்த விழிப்புணர்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பாரத்நெட் இணையதள வசதி ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக உலக தண்ணீர் தினத்தன்று கிராமசபைக் கூட்டத்தில் கூட்டப் பொருளாக விவாதிக்கப்பட்டது.


 


மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.


இந்த திருமுக்கூடலூரின் உடைய தனி சிறப்பு 3ஆறுகள் ஒன்று சேரும் இடமாகும், இந்த இடத்தில் உலக தண்ணீர் தின கிராமசபைக்கூட்டம் நடைபெருவது சிறப்பாகும். தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மூலம் கடந்த 40 ஆண்டுகளாக எல்லா ஊருக்கும் தண்ணீர் வழங்கி வருகிறது.


 




 


அனைத்து கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தக் காவேரி ஆற்றில் இருந்து மிக தூரத்தில் உள்ள ராமநாதபுரத்திற்கு தண்ணிர் வழங்கி கொண்டிருக்கின்றோம். அதேபோல தேசிய அளவில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். இப்பொழுது சோமூரில் உள்ள 2054 வீட்டிற்கும் தனி தனியாக தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல தொடர்ந்து குடிநீர் கிடைப்பதற்காக ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றார்கள். சர்வதேச தண்ணீர் தினத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தண்ணீர் வழங்குவதில் பல விஷயம் உள்ளது சுத்தமாக கொடுப்பதும் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியிணை மாதம் இரண்டு முறை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்.  மேலும் ,குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் குடிநீரை வீணாக்க கூடாது. தண்ணீர் என்பது அளவில்லாத ஒரு பொருள் கிடையாது  அதனால் தண்ணீர் அதிகமாக இருந்தாலும் குறைந்த அளவு  இருந்தாலும் தினசரி நாம் பயன்படுத்துவது நீரின் பயன்பாட்டை சரியாக பயன்படுத்த வேண்டும்.  இதைத் தவிர முக்கியமாக வெயில் தாக்கம் அதிகம்  உள்ளதால் இந்த வெயில் காலத்தில் பொதுமக்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். 


மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்தலின்படி நமது மாவட்டம்  தனித்துவமான முன்னெடுப்பால் தூய்மை பணியாளர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு நம்முடைய அரசின் கனவாக இருக்கின்றது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு 1.20 இலட்சம் மட்டும் ஒன்றிய அரசு வழங்கப்பட்டு வருகின்றது.   ஆனால் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூலம் ரூ.2.70 இலட்சம்  வீடு கட்டும் திட்ட பணிகளுக்கு கூடுதலாக ரூ.1.50 இலட்சம் நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இப்பொழுது நமது தமிழ்நாடு அரசு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எல்லாருக்கும் வீடு வழங்க வேண்டும் என்று அடிப்படையில் வீடு இல்லாதவர்கள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் மாநில அரசு வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளார்கள். 


இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு ஆகும். கம்பு, சோளம், மக்காச்சோளம் ,கேழ்வரகு, திணை ஆகியவைகளை நம்ம ஒரு காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தினோம் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் மிக குறைவாக மழை பொழியும் மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் உள்ளது.  வருடத்திற்கு 640 மி.மீ மட்டுமே பெய்கிறது. எனவே குறைந்த அளவு தண்ணீரில் விளையும் சிறுதானிய வகை பயிர்களை அதிகமாக பயிரிட வேண்டும் சிறுதானியங்களில் நுண்ணூட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளது.  நமது உடம்புக்கும் ஆரோக்கியமானது. குறிப்பாக பெண்களும் சிறுதானிய உணவுகள் உண்ண வேண்டும். சிறுதானிய உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு எந்த நோய்களும் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்.


 




நம்ம ஊரில் உள்ள அனைத்து பெண்களும் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட ரூ.3. 50 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு வழங்கினோம். மகளிர் சுய உதவி குழு என்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாட்டில் தான். அதுவும் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் காலத்தில் தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றால் அவர்கள் கையில் பொருள் இருக்க வேண்டும் அதுதான் பிரதான நோக்கம். அந்த வகையில் தான் அதிக அளவிலான வங்கி கடன்கள் வழங்கி மகளிர் சுயவுதவிக்குழுகளின் வாழ்வாதாரத்தை பெருக்கி வருகிறோம். மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினர்கள் ஆதிதிராவிடர்களாக இருந்தால் 30% மானியம் வழங்கப்படுகிறது தாட்கோ மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடதக்கது.   மாண்புமிகு  தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்கள் அனைத்து  ஊர்களிலும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அறிவிப்புகளை வழங்கி உள்ளார்கள். அந்த காலை சிற்றுண்டி உணவங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..  ஆகையால் நம்ம ஊரு பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.  ஒவ்வொரு கிராமத்திற்கும் இணையதள வசதியை ஏற்படுத்துவதற்கான கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது கூடிய விரைவில் அனைத்து ஊராட்சிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் காரணமாக இணையதளம் மூலமாக நடைபெறும் அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற உள்ளது. குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்த பின்பு கல்லூரி படிப்பை தொடர வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள் உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  தெரிவித்தார்கள்


முன்னதாக கிராமசபை கூட்டரங்கில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ம.லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி வாணிஸ்வரி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் திரு‌.சீனிவாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர். திரு.அன்புமணி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ரூபினா, கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.விஜயலெட்சுமி, திரு.பரமேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கீதா,  சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மரு‌.சந்தோஷ்குமார், வேளாண் இணை இயக்குனர் திரு. சிவசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மரு. முரளிதரன் , கரூர் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.