Pugazhenthi MLA Demise LIVE: மறைந்த திமுக எம்.எல்.ஏ., புகழேந்திக்கு அஞ்சலி செலுத்த குவியும் தொண்டர்கள்!
Pugazhenthi MLA Demise: புகழேந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் - விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.,புகழேந்தியின் உடல் அவரது சொந்த கிராமமான அத்தியூர் திருவாதியில் நாளை மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., புகழேந்தி தொகுதி மக்களிடமும் கட்சி தொண்டர்களிடமும் நற்பெயர் பெற்றவர். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாத ஒன்று. அனைத்து சமூக மக்களிடமும் அன்பாகப் பழகியவர் புகழேந்தி. எனக்கு இனிய நண்பராக இருந்தவர்.அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ., ராதாமணி 2019 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இதேபோல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி உடல் நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார்.
புகழேந்தி எம்.எல்.ஏ., நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Background
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமான செய்தி திமுக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமாக இருந்தவர் ந. புகழேந்தி. இவர் கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய புகழேந்தி நேற்றைய தினம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்தபோது, அவர் திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார். இதனையடுத்து புகழேந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவை பலனளிக்காமல் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த புகழேந்திக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் திமுக தலைமை வாக்களித்தது. இம்முறை வெற்றி பெற்ற அவர், அந்த தொகுதி மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து திமுக தொண்டர்களின் அஞ்சலிக்காக விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் எடுத்து செல்லப்பட்டது. மாலை 4 மணி அறிவாலயத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
பின்னர் புகழேந்தியின் உடல் அவரது சொந்த கிராமமான அத்தியூர் திருவாதியில் நாளை மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -