விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜுலை 10 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஜூலை 8 முதல் 10ம் தேதி வரையிலும் வாக்கு எண்ணிகை ஜூலை 13ம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 4 நாட்கள் மூட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.


தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள்


 இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.


டாஸ்மாக் விடுமுறை 


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜுலை 10 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஜூலை 8 முதல் 10ம் தேதி வரையிலும், அதேபோல வாக்கு எண்ணிகை நடைபெறும் ஜூலை 13ம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 4 நாட்கள் மூட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி  உத்தரவிட்டுள்ளார்.


புதுச்சேரியிலும் மதுக்கடை மூடல்


அதேபோல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநில எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் மதுக்கடைகளை 4 நாட்கள் மூடுமாறு கலால் துறை உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து பிரசாரம் முடிந்த 8-ம் தேதி முதல் அத்தொகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசின் கலால் துறை உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியின் எல்லை புதுவை மாநிலம் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் அமைந்துள்ளன. ஆகவே, மது புதுச்சேரி பகுதியிலிருந்து விக்கிரவாண்டிக்குள் செல்லாதவகையில் புதுச்சேரி மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளுக்கு இன்று முதல் வரும் 10ம் தேதி (புதன்கிழமை) வரை விடுமுறை அளித்து இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும், விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை வரும் 13 ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து 13-ம் தேதியும் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் மொத்தமாக 4 நாட்கள் புதுச்சேரியில் எல்லைப்பகுதியிலும் மதுக்கடைகள், சாராயக்கடைகள் மூடப்பட்டிருக்கும். மண்ணாடிப்பேட் கொம்யூனில் மதுபானக்கடைகள், சாராய, கள்ளுக்கடைகள் அனைத்தும் இந்த நான்கு நாட்களும் மூட புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவை அனுப்பியுள்ளார்.