தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் வடமாநில தொழிலாளர்கள் 18 அயிரம் கோடி ரூபாயை ஊதியமாக பெற்று, அவர்களது ஊர்களுக்கு அனுப்புவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
வேலை தர நாங்கள் தயார் - விக்கிரமராஜா:
இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளாமல், வேலை வாய்ப்புகளை தேட இளைஞர்கள் முன்வர வேண்டும். வேலை தருவதற்கு வணிகர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம். இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி மாதம் 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை, தங்களது மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இதனால் தான் வணிகம் இங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராகுங்கள்” எனவும் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
வடமாநில பணியாளர்கள் ஆதிக்கம்:
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதாரா வளர்ச்சி காரணமாக, இளைஞர்கள் நேரடி உடலுழைப்பில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. இதனால் ஏற்பட்ட பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாகத் தான், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடமாநில பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பெருநிறுவன கட்டுமான பணிகளில் மட்டுமே காணப்பட்ட வடமாநில பணியாளர்கள் தற்போது, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நடவு பணி செய்வது வரையில் விரிவடைந்துள்ளனர்.
சென்னை, கோவை மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நிறுவனங்கள் நிறைந்த நகரங்களில், வடமாநில பணியாளர்கள் குடிபெயர்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வடமாநில பணியாளர்கள் வந்திறங்கி சாரை சாரையாக நடந்து சென்றது அதற்கு ஒரு உதாரணமாகும். அவர்கள் உள்ளூர் மக்களை விட குறைந்த ஊதியத்திற்கே பணியாற்றுவதால், முதலாளிகளும் வடமாநில ஊழியர்களை பணிக்கு சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தீவிரமடையும் பிரச்னை:
ஆரம்ப காலங்களில் வடமாநில பணியாளர்களின் வருகை தொடர்பாக, சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழக இளைஞர்களின் வேலைகளை ஆக்கிரமிக்க தொடங்கியதை உணர்ந்ததும், சமூக மற்றும் அரசியல் தளங்களில் வடமாநில பணியாளர்களுக்கு எதிரான பரப்புரை தீவிரமடைய தொடங்கியுள்ளது. தமிழக பணிகள், தமிழக இளைஞர்களுக்கே என்ற கோஷமும் வலுவடைய தொடங்கியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியின்ர் மட்டுமின்றி, திரைநட்சத்திரங்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
மோதல்:
சமூக வலைதளங்களில் நிலவும் மோதல் போக்கை தாண்டி, தினசரி வாழ்விலும் வடமாநில மற்றும் தமிழக இளைஞர்கள் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில், தங்களை பணிநீக்கம் செய்து விட்டு உள்ளூர் இளைஞர்களை பணியமர்த்தக் கூடாது என வடமாநில பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதோடு அண்மையில், திருப்பூர் மற்றும் கோவையிலும் வடமாநில மற்றும் தமிழக இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பேசுபொருளானது. அதோடு, வடமாநிலத்தவர்கள் தொடர்பான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிப்பதால், பொதுமக்களிடையே அவர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான், ”தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று தன்னை ஏமாற்றிக் கொள்ளாமல், வேலை வாய்ப்புகளை தேட இளைஞர்கள் முன்வர வேண்டும் என, விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.