ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 


உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இதன் காரணமாக இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. 






புத்தாண்டு பிறப்பையொட்டி அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக முழுக்க முழுக்க ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் பண்டிகை நாட்களில் அலுவலகம் வந்து தொண்டர்களை சந்திப்பது வழக்கம். அதன்படி சில தினங்களுக்கு முன் தேமுதிக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். 


அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வருகை தரவுள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கழகத்தை சேர்ந்த அனைவரும், பொதுமக்களும் நேரில் வந்து கேப்டனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவர்களின் வாழ்த்து ஒலியைக் கேட்டு பூரிப்படைந்த விஜயகாந்த் கூட்டத்தினரை பார்த்து தம்ப்ஸ் அப் காட்டினார். அவர் வணக்கம் சொல்ல கையை கூப்பினாலும் முடியாமல் தவிப்பதைன் பார்த்த தொண்டர்கள் கண்கலங்கினர். தொடர்ந்து சில நிமிடங்கள் விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருடன் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர்.