தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவரும், நடிகருமானவர் விஜயகாந்த். கடந்தாண்டு காலமான இவரது 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டது. 


மயக்கமடைந்த விஜயகாந்த் மகன்:


விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவியும், தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனும் தொண்டர்களைச் சந்தித்தனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசலில் விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகபாண்டியன் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அவர் மயக்கம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மயக்கம் அடைந்த அவரை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


விஜயகாந்த் சிலை திறப்பு:


விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் அவரது சிலை திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. திட்டமிட்டபடி இன்று காலை விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டது. வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளும் விஜயகாந்த் தொண்டர்களைச் சந்திப்பது வழக்கம்.


அவர் கடந்தாண்டு காலமாகியதால் அவரது சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏராளமான தொண்டர்கள் காலை முதலே தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தொண்டர்கள் மத்தியில் சிக்கிய சண்முக பாண்டியன் மயக்கம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


படைத்தலைவன்:


கடந்த 2015ம் ஆண்டு சகாப்தம் படம் மூலமாக அறிமுகமான சண்முகபாண்டியன் மதுர வீரன் படத்தில் நடித்தார். தற்போது அவர் படைத்தலைவன் படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


விஜயகாந்த் மறைவிற்கு பிறகு கொண்டாடப்படும் அவரது முதல் பிறந்தநாள் என்பதால்  தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது தொண்டர்கள் இந்த பிறந்தநாளை உணர்ச்சிவசத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் காலை முதலே அவரது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கினர். மேலும், பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்று வருகிறது.