9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். போட்டியிட விரும்புவோர் நாளை, நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெறலாம் என்றும் கூறியுள்ளார்.


ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் சார்பில் போட்டியிடவிருப்ப மனு
வழங்குதல் சம்பந்தமாக தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிவிப்பு


தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021. 17.09.2021 இரண்டு நாட்கள் காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்





ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


கட்டணத் தொகையாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு ரூ. 4ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.2ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 22-ஆம் தேதி கடைசி நாளாகும். 23-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை; வரும் 25ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் நடைபெற இரண்டு கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.


அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகல்


9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என நேற்று அறிவித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மாவட்ட இடைத்தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ: தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று  மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில், இணைய வழியில் இன்று மாலை நடைபெற்றது. அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது