வட கிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து ஆரம்பமே அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்கள் உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் நல்ல மழை கிடைத்தது. மோந்தா புயல் தமிழகம் அருகே வந்து நல்ல மழை கொடுத்த நிலையில் விசாகப்பட்டினத்தில் கரையை கடந்தது. இதனையடுத்து சுமார் ஒரு வார காலத்திற்கு மேல் மழையானது ரெஸ்ட் எடுத்திருந்த நிலையில் தற்போது அடுத்த ஆட்டத்திற்கு மழை தயாராகி வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை
அந்த வகையில் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (16-11-2025) தொடர்ந்து அதே பகுதிகளில் நிலவுகிறது.இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெல்டா மாவடங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது.
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
நாளை (17-11-2025) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே மழையானது இன்று இரவு முதல் வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பள்ளிகளுக்கு விடுமுறையா.?
எனவே நாளை இந்த மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படுமா.? விடுமுறை அறிவிக்கப்படுமா.? என மாணவர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மழை நிலவரம் தொடர்பாக அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள் எனவும், இன்று மாலை அல்லது நாளை அதிகாலை மழையின் தீவிரத்தை பொறுத்து விடுமுறை விடலாமா அல்லது பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுமா என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.