புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லை எனக் கூறி சிபிசிஐடியால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டு, வழக்கு, வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தை விசாரித்து வந்த சிபிசிஐடி
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி போலீசார்
2 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து, கடந்த மாதம் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், வேங்கைவயலைச் சேர்ந்த காவலரான முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மேலும், வேங்கைவயலில் பாதிக்கப்பட்டோரும், குற்றம்சாட்டப்பட்டோரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வழக்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சிபிசிஐடி தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, அது குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
குற்றப்பத்திரிகையை எதிர்த்து வழக்கு
இந்த நிலையில், சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை கடந்த 1ம் தேதி நடைபெற்றது. அப்போது, இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டது குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்காதது குறித்து அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கமளித்த அவர், புகார்தாரருக்கு 3 முறை சம்மன் அனுப்பியதாகவும், அவர் வர இயலாததாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். அதோடு, சம்பவத்தின்போது, அந்த தண்ணீரை யாரும் குடிக்கவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி தீர்ப்பு
இந்த நிலையில், இன்று(03.02.25) தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்படுவதாகவும், அவர்கள் கோரியபடி, இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டு, புகார்தாரர் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார்.