தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி - எதற்காக தெரியுமா?
தனிநபர் தாக்குதல் ஏற்கத்தக்கதல்ல! பா.ஜ.க. மாநில தலைவரின் பேச்சு கண்டனத்திற்குரியது - கீ.வீரமணி

தவெக தலைவர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், நடிகர் விஜயின் நேற்றைய (13.2.2026) பேச்சு குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள முகம் சுளிக்க வைக்கும் கருத்துகள் நாகரிகமானவையல்ல. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குறித்துப் பேசும்போது அவர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதும், தனிநபர் தாக்குதல் நடத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. அதிலும் பெண்கள்குறித்து அவதூறாகப் பேசுவது கண்டனத்திற்குரியதாகும். ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசுவது பொதுவாழ்க்கைக்கு இழுக்காகும். இதில் கட்சிக் கண்ணோட்டம் நமக்கில்லை. யாராயினும் அது தவறுதான்! அனைவரும் பாடம் கற்பார்களாக! என்று பதிவிட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் பேசியது என்ன?
“பாவம் அவர் அனுபவமே இல்லாதவர் முதலில் வீட்டில் இருந்து, அதாவது திரிஷாவின் வீட்டிலிருந்து வெளியே வரட்டும் முதலில் குடும்பத்துடன் உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும் முதலில் வீட்டிலிருந்து வெளியே வரச் சொல்லுங்கள்” என்று பேசினார். இவரின் பேச்சுக்கு பல தலைவர் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்பி சுதா கண்டனம்
“எந்தப் பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ அந்தப் பெண்ணிடம் நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களின் மாண்பை குறைக்கும் வகையில் பொதுவெளியில் அவர் பேசுவது ஆர்எஸ்எஸ், பாஜகவின் சானாதன சித்தாந்தத்தின் வெளிப்பாடு” என்று தெரிவித்தார்.
டிடிவி தினகரன் கருத்து
தனிப்பட்ட விமர்சனங்களை யாரும் தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் பொதுவாக பேசக்கூடியவர் அல்ல நான் அதை பார்க்கவில்லை. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும் என்று கூறினார்.























