Veedur dam : வீடூர் அணை நிரம்பும் அபாயம்! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் : 32 அடி உயர வீடூர் அணை நீர்மட்டம் 29 அடியை எட்டியதால் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்: மயிலம் அருகே வீடூர் அணை நிரம்பி வருவதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 32 அடி உயர வீடூர் அணை நீர்மட்டம் 29 அடியை எட்டியதால் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.
வீடூர் அணை
வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
32 அடி உயரம் கொண்ட வீடூர் அணை கனமழை காரணமாக 29.375 அடி வரை நிரம்பி உள்ளது. விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என்பதால் எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நிலை உள்ளது. அவ்வாறு திறந்துவிடப்படும் நீர் சங்கராபரணி ஆற்றில் புதுச்சேரி மாநில எல்லையான மணலிப்பட்டை வந்தடைந்து செட்டிப்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிளைப் பட்டு வழியாக ஊசுட்டேரியின் ஒரு பகுதிக்குச் செல்லும். மறுபகுதி குமராபாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு வழியாக வில்லியனூர் சென்று கடலில் கலக்கும். இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆகவே, சங்கராபரணி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
எந்த நேரமும் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதால் ஆற்றுப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க, குளிப்பாட்ட ஓட்டிச் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுப்பெற்றது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஏற்கனவே பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





















