ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா நிலையத்தை கையகப்படுத்தப்பட்ட பணிகளில் எண்ணற்ற சட்டக் குளறுபடிகள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கப்பட்டது செல்லும் என அறிவிக்கக் கோரி அஇஅதிமுக மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கை, இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தது. 


வேதா நிலையம்:   


மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த குடியிருப்பான வேதா நிலையம் இல்லத்தினை நினைவுச் சின்னமாக மாற்றப்படும் என்று முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணை வெளியிட்டதோடு, இந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. இதன் மூலம், ஜெயலலிதா குடியிருப்பு அரசின் சொத்தாகியது. வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நகர  நீதிமன்றத்தைநாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 


இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின்  அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி விசாரித்து வந்தார். தங்கள் மனுவில், "காலஞ்சென்ற ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்ந்த குடியிருப்பை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். குடியிருப்பை, நினைவில்லமாக மாற்றவும் தடை விதிக்க வேண்டும்.


 



வேதா நிலையம்


 


மேலும், ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில், தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர நீதிமன்றத்தில்  வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு சட்டத்திற்கு எதிரானது" என்று தெரிவித்திருந்தனர். 


வழக்கின் அனைத்து வாதங்களையும் விசாரித்த நீதிபதி சேஷசாயி, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி தீர்ப்பளித்தார். மேலும், மூன்று வாரங்களில் தீபா, தீபக் ஆகியோரிடம் வீட்டை ஒப்படைக்கவும்  உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பிலும் (ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர்) தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவில்லை. 


இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த டிவிசன் அமர்வு நீதிபதிகள் பரெஷ் உபாத்யாய், சத்திக்குமார்  ஆகியோர் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து உத்தரவிட்டனர் .