மோரூர் பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்த காவல்துறையின் ஒருசார்பு நிலையிலான பாகுபாட்டையும் சாதி வெறியர்களையும் கண்டித்த சீமானுக்கும், எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக்-க்கும் தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
சேலம் - தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ளது ஓமலூர் அடுத்த உள்ள கே.மோரூர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. கடந்த 17 ஆம் தேதி சேலம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இப்பகுதியில் கொடி ஏற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே அங்கு திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடி கம்பங்கள் இருக்கும் நிலையில் இடையூறு ஏற்படுவதால் இனி அப்பகுதியில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை நடுவதற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
காவல்துறையின் இந்த ஒருதலைபட்ச போக்கைக் கண்டித்து பேசிய திருமாவளவன், "பொது இடங்களில் விசிக கொடியை ஏற்றக்கூடாதா? அனைத்துக்கட்சிக் கொடிகளும் பறக்குமிடத்தில் சிறுத்தைகள் கொடி பறக்கக் கூடாதா? சாதிவெறிக் கும்பலைக் காரணம் காட்டுவது சட்டபூர்வமான அணுகுமுறையா? அரசே, இது என்ன நீதி?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மோரூரில் சாதிவெறிப் பித்தர்கள் காவல்துறையின் முன்னிலையில் சோடா பாட்டில் வீசியதில் படுகாயமடைந்த சிறுவன் தொல்காப்பியன். பொது இடத்தில் விசிக கொடியேற்றுவதைச் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையாக மாற்றிய காவல்துறையின் இழிபோக்கால் நடந்த பின்விளைவு. காவல்துறையின் கேவலமான சாதிய அணுகுமுறை. காரணமான அதிகாரிகள்மீது அரசே நடவடிக்கை எடு" என்று கோரிக்கை வைத்தார்.
சீமான் கண்டனம்:
இந்நிலையில், மோரூரில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " சேலம் மாவட்டம், மோரூரில் தம்பி தொல்காப்பியன் சாதிவெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியும், அதுதொடர்பான காணொளியும் கண்டு நெஞ்சம் பதைபதைத்துப் போனேன்.
காவல்துறையின் முன்னிலையிலேயே நிகழ்த்தப்பட்ட இக்கொலைவெறிச்செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. சாதி, மதப்பூசல்களும், சமூக மோதல்களும் இல்லாது, சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே, சாதிவெறிப்போக்கை வெளிப்படையாக ஆதரித்து, வன்முறைச்செயலை வேடிக்கைப் பார்த்து நிற்பது வெட்கக்கேடானது.
ஓர் அரசியல் இயக்கத்திற்குத் தங்களது இயக்கத்தின் கொடியை ஏற்றவும், கிளையைத் திறக்கவும் இருக்கும் சனநாயக உரிமையையே முற்றாக மறுத்து, விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை ஏற்றியதற்காக அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வன்முறையை ஏவிவிடும் சாதிவெறியர்களின் இக்கொடுங்கோல்போக்கை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். அதனைச் செய்யாது, சாதிவெறிக்கும், சமூகப்பிளவுக்கும் துணைநிற்கும் மோரூர் பகுதி காவல்துறை அதிகாரிகளது செயல்பாடும், அதனைக் கண்டிக்காத தமிழக அரசிள் நிலைப்பாடும் சமூக இழிவாகும்.
ஆகவே, மோரூர் பகுதியில் சாதி வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமெனவும், அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், வாசிக்க:
Older Persons Day: உலக முதியவர்கள் தினம்... இனியாவது தொடங்கட்டும் பெரும் விவாதம்!