நானும் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறினேன் எனவும் முதல் புள்ளியை மட்டும் வைத்துள்ளோம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், பாஜக என பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நிற்கும் நிலையில், தற்போது அந்த வரிசையில் நடிகர் விஜய் ஆரம்பித்த தவெகவும் இணைந்துள்ளது.
என்னதான் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் விசிக நடத்திய மதுவிலக்கு மாநாடு அக்கட்சிக்கு புதிய பிம்பத்தை தேடித்தந்தது என்றே சொல்லலாம். அப்படி இருக்கையில்தான் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற நுட்பத்தை கையாண்டுள்ளார். அந்த நேரம் முதல் அதிமுக விஜய்யுடன் கைக்கோர்க்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக அந்த பேச்சுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து விசிகவின் திருமாவளவன் எங்கு போனாலும் விஜய் பற்றி கேள்விகளே துளைத்து வருகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் விஜயுடன் கூட்டணி பற்றி கேட்காதீர்கள் என திருமாவளவன் வேண்டுகோளே வைத்துவிட்டார். சரி முடிந்தது பிரச்சினை என பார்த்தால், திருமாவளவனே புது ட்விஸ்ட் வைத்துள்ளார்.
அதாவது, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாமி தரிசம் செய்வதற்கு முன்னதாக தனியார் மண்டப திறப்பு விழா ஒன்றில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “தேர்தலில் அதிக சீட் வாங்க வேண்டும் என்பதற்காகவோ, பணம் காசு வேண்டும் என்பதற்காகவோ பழனி கோயிலுக்கு வரவில்லை. என் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் வந்தேன்.
நான் அரசியலுக்கு வரும்போது எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்று முழங்கினேன். அது எளிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னேன். நானும் முதல்வராக வேண்டும். எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று. அப்படியென்றால் நானே முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவேண்டும் என அர்த்தம் இல்லை. எளிய மக்கள் வரவேண்டும்.
அதற்கு முதல் புள்ளியை வைத்துள்ளோம். இன்னும் கோலம் போட புள்ளிகள் தேவைப்படுகிறது. ஒரு புள்ளியை வைத்து கொண்டு கோலம் போட முடியாது. கட்சி தொடங்காமலேயே பலர் ஆட்சிக்கு ஆசைபடுகின்றனர். நாம் வளர்ந்து வருகிறோம். தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருக்கிறோம்.
அரசியல் சக்திகளை திருத்தக்கூடிய வலிமை பெற்றவர்களாக மாற வேண்டும். தென்னிந்தியா முழுவதும், மகாராஷ்டிராவில் சிறுத்தைக்கொடி பறக்கிறது. கட்சியை வலுப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.