கூட்டணி தொடர்பாக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜினாவின் ஆலோசனையை ஏற்க வேண்டாம் அவருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என திருமாவளவனிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது கட்சியிலும் கூட்டணி உறவிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஆட்சியில் பங்கு என்று முழக்கத்தை சில நாட்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எழுப்ப திமுக கூட்டணியே பரபரப்பானது. பின்னர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் பேசிய பிறகு அந்த நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அணையாமல் இன்று வரை தகித்தே வருகிறது. அதற்கு தீனிப்போட்டு மேலும் வளர்க்கும்விதமாக இன்னொரு நிகழ்வு விரைவில் அரங்கேறவிருக்கிறது.
அது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் ஒரே நிகழ்ச்சியில் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றப்போவதுதான். சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் விஜய் வாழ்த்து சொன்னது, விஜயின் மாநாட்டிற்கு முதல் ஆளாக திருமாவளவன் வாழ்த்துச் சொல்லியது என இருவருக்குள்ளும் பரஸ்பரம் நட்பு இருந்து வரும் நிலையில், இருவரும் முதன்முறையாக பொதுவெளியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பது அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணியை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜய் பங்கேற்பு நிகழ்ச்சியில் திருமா எப்படி பங்கேற்கலாம் என திமுக தரப்பில் கேள்வி எழுப்பி திருமாவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
தாவெகாவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதை அப்போதே விசிக வரவேற்றது. இதை அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் இருப்போம் என திருமாவளவன் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் ஆலோசனையை கேட்க வேண்டாம் என கட்சியின் மாநில நிர்வாகிகள் திருமாவிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசிக நிர்வாகிகள் கட்சிக்கு புதியவரான ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவளவன் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே துணை பொது செயலாளர் பொறுப்பு கொடுத்துவிட்டனர். கட்சி நிகழ்ச்சிகளில் தன் அருகில் அமர திருமா அமர வைக்கிறார். அவர் கொடுக்கும் ஆலோசனையை ஏற்று செயல்படுகிறார். இது கட்சியிலும் கூட்டணி உறவிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என விசிகவின் மூத்த நிர்வாகிகள் புலம்புவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவு எதிர்ப்பு என கட்சிக்குள் இரு கோஷ்டிகள் உருவாகி இருப்பதால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என புலம்பி வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையெல்லாம் தவிர்க்க ஆதவ் அர்ஜூனா தரும் ஆலோசனைகளை திருமா எற்கக்கூடாது என நிர்வாகிகள் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளதாக கூறுப்படுகிறது.