சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 


இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை-வெண்ணிலா தம்பதியின் பிறந்து ஐந்து நாள்களான ஆண் குழந்தையை பெண் ஒருவர் திருடிச் சென்றார். காவல்துறையினர் விசாரணையில், காரிப்பட்டி நேரு நகரைச் சேர்ந்த வினோதினி என்பவர் குழந்தையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். மகப்பேறு வார்டில் சிசிடிவி கேமராக்கள் வைத்திருந்ததன் காரணமாக, பச்சிளங் குழந்தையை திருடிய பெண்ணின் அடையாளத்தை வைத்து காவல்துறையினர் 15 மணி நேரத்திற்குள் மீட்டனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதாகி உள்ளதால், திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, பழுதாகி உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் லிப்ட்களை சரிசெய்ய மருத்துமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதேபோல் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு முதல் தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத்துறை விரைந்து வந்த தீயை அனைத்தனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீயணைப்பு கருவிகள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் யாரேனும் வந்தால் மட்டுமே தற்காலிகமாக சிலவற்றை சரி செய்கின்றனர். அது சில நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது என்று தெரிவித்தனர்.


இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளதால் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். இங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் கொண்டு வரும் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், போதுமான அளவு பாதுகாப்பு இல்லாததால், தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடு போகிறது. அதேபோல், மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது. இதனால் குழந்தை கடத்தல், இருசக்கர வாகன திருட்டு, நோயாளிகளின் உறவினர்களின் பணம் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்கள் நடக்கவும் காரணமாக அமைகிறது.



அதேபோல், மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலன் கருதி பொது மருத்துவம், அறுவை சிகிச்சை பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம், மகப்பேறு வார்டு உள்ளிட்ட 17 இடங்களில் மின்தூக்கி (லிப்ட்கள்) வைக்கப்பட்டுள்ளது. இதில் 8க்கும் மேற்கட்ட லிப்ட்கள் வேலை செய்யாமல் பழுதாகி உள்ளது. போதுமான பராமரிப்பு இல்லாததன் காரணமாக அடிக்கடி லிப்ட்களில் நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவர் உள்பட பலரும் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே, மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அனைத்து லிப்ட்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிப்பு செய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.