நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தமிழ்நாடு அரசு விஏஓக்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு  கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விஏஓ சங்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், கிராம் நிர்வாக அலுவலர்கள் அளிக்கும் புகாருக்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அலுவலகங்களை ஊரின் ஒதுக்குப்புறம் கட்டித் தராமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கட்டித்தரவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இவர் வழக்கம்போல  அலுவலகத்தில் பணிபுரிந்து சென்றார். அப்போது திடீரென அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை அரிவாளால் கை,தலை.கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.


லூர்து பிரான்சிஸ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக  முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசில் புகார் அளித்தது தெரிய வந்தது. மணல் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தான் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாக இருப்பார்கள் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.


இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் வல்லநாடு அருகே உள்ள கலியாவூரைச்  சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரான மாரிமுத்து என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம் நிர்வாக அலுவலர்கள் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 


கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும்,  குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.