தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. படுக்கையில் அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்ததால் வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிப்பட்டது. நெற்றி காயம் மற்றும் மேசை விளிம்பில் ரத்த கறையை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


அதேபோல், வாணி ஜெயராம் வீட்டுக்கு வெளியில் இருந்து எந்த நபரும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. தடயவியல்துறை அறிக்கை, பிரேத பரிசோதனை ஆய்வு அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 


தலைவர்கள் இரங்கல்:


தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் 


பழம்பெரும் பிரபல திரைப்பட பின்னணி பாடகி திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் உயிரிழந்த செய்தி  அதிர்ச்சியையும்,மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.தனது இனிமையான குரல் வளத்தால் அனைவரும் மனதிலும் இடம் பிடித்த வாணி ஜெயராம் அவர்களுக்கு அண்மையில் மத்திய அரசு பத்மபூஷண் விருது  அறிவித்து கௌரவித்தது.அவரது இழப்பு இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.


கவிஞர் அறிவுமதி


இசைப்பாடல் என்பது மனச்சுமை மிக்க மனித உயிர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதில் பல வகையான இனிமையான குரல்களை தமிழக மக்களுக்கு சினிமா வழங்கியுள்ளது. மக்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிற குரல்களில் வாணி ஜெயராம் குரலும் ஒன்று. தமிழ் சினிமா அவரை அதிகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், அவர் அந்த இசைக்குரலில் நமக்கு பயன்பட்ட விதம் மறக்க முடியாதது. அவரின் இழப்பு மறக்க முடியாதது. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள். 


கவிஞர் வைரமுத்து 


இந்த செய்தியை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மனது இறுகி கிடைக்கிறது.பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டபோது கடந்த வாரம் வாணி ஜெயராமிடம் பேசினேன். நான் பேசியபோது அவருக்கு குரல் இறுகி கிடந்தது. வழக்கமான குரல் இல்லை என கேட்டேன்.  பத்மாவதி கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அப்போது அவர் குரல் வழக்கமான குரல் மாதிரி இல்லை. அதுதான் அவரிடம் கடைசியாக நான் பேசிய பேச்சு. - வைரமுத்து


இசையமைப்பாளர் இமான் 






வாணி ஜெயராம் குரல் ஒரு அற்புதமான குரல். இத்தனை வருடங்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். அவரது மறைவு இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. நான் மழை என்ற ஒரு படத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் பாடல் ஒன்றை பதிவு செய்தேன். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட போது மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இப்படி நடந்து விட்டது. அவரது ரசிகர்கள் சார்பாக என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 


பாஜக தலைவர் அண்ணாமலை 






ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்கள் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்தது. இந்தியாவின் இதய கமலமாக, பத்மபூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட திருமதி வாணி ஜெயராம் அவர்களின் இழப்பு இசை உலகின் பேரிழப்பு. அவரின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி! என பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


நடிகை கஸ்தூரி 






பல ஆண்டுகளாக வாணி ஜெயராமோடு நல்ல உறவில் இருந்தேன். அவர் அடிக்கடி என் விவாதங்கள் மற்றும் பெண்ணியப் பணிகளைப் பாராட்டி வருவார். அவளுடன் நான் எடுத்த கடைசிப் படம் இதுதான் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 


கங்கை அமரன் 


வாணி ஜெயராம் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த அளவுக்கு வந்தார். அவர் இழப்பு இசைத்துறைக்கு பெரிய இழப்பு. 


பாடகர் க்ரிஷ்


வாணி ஜெயராம் இழப்பு இசைத்துறைக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பெரிய இழப்பு. இன்னும் 1000 வருடங்கள் அவர் பாடலின் மூலம் நிலைத்து நிற்பார் என தெரிவித்துள்ளார்.