கோவை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில்:
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என மொத்த மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் இருந்தபடியே பிரதமர் மோடி கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்.
எங்கெல்லாம் நின்று செல்லும்?
பொதுவாக, கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 7 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். ஆனால், வந்தே பாரத் ரயிலில் பயணிப்பதன் மூலம் 2 மணி நேரம் குறைந்துவிடும் என்று தெரிகிறது. அதாவது, 5 மணி நேரம் 40 நிமிடத்தில் பெங்களூருவுக்கு சென்றுவிடலாம்.
அதிகாலை 5.00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், காலை 11.30 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.00 மணிக்கு கோவைக்கு வந்தடையும். இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் உணவு (சைவம், அசைவம்), தின்பண்டங்கள் உடன் கூடிய சாதாரண ஏசி சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் ரூ.1,025 ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் ரூ.1,930 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள், தனித் தனி சார்ஜ் போர்ட்கள், சூடான குடிநீர், உணவு, விமானத்தில் இருக்கக் கூடிய தரத்தில் கழிவறை, அவசர காலத்தில் லோகோ பைலட் உடன் பேசும் வசதி என பல அதிநவீன வசதிகள் இந்த ரயிலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.