கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”கடந்த 2016-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பிறகு, 2021 சட்டப் பேரவைத் தேர்தல் வரும் வரை நான்கரை ஆண்டுகள், தமிழகமே போராட்ட களமாக இருந்தது. எதற்கெடுத்தாலும் போராட்டம் தான். இந்த நான்கரை ஆண்டுகளில் திரைப்பட நடிகர்கள் கருத்து கந்தசாமிகளாக மாறி, ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள், மது ஒழிப்பு போராளிகள், விவசாயிகளுக்கு ஆதரவு என விதவிதமான போராளிகள் நாளுக்கு நாள் அவதாரம் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.


இயற்கை எரிவாயு திட்டம், நியூட்ரினோ திட்டம், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம், எரியாயு குழாய் பதிக்கும் திட்டம், மின் பாதை அமைக்கும் திட்டம், மேம்பாலங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் என்று மத்திய, மாநில அரசுகளின் எந்த வளர்ச்சித் திட்டங்களாக இருந்தாலும் அவற்றை எதிர்ப்பது, அவற்றுக்கு எதிரான அவதூறான செய்திகளை பரப்பி பொதுமக்கள், விவசாயிகளிடம் அச்சத்தை விதைப்பது தான் இந்த போராளி அவதாரம் எடுத்தவர்களின் நோக்கமாக இருந்தது. அதில் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி, திமுக அரசியல் ஆதாயம் அடைந்தது.


2018-ல் கருணாநிதி காலமான போது, அவரது உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அதிமுக அரசு மறுத்தது. உடனே உயர் நீதிமன்றம் சென்ற திமுகவுக்கு, எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பல வழக்குகள் சிக்கலாக வந்தமைந்தது. அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட 15-க்கும் அதிகமான பொதுநல வழக்குகள் ஒரே நாளில் திரும்பப் பெறப்பட்டன. திமுகவுக்கு ஒரு பிரச்சினை என்றதும், ஒரே நாளில் 15-க்கும் அதிகமான வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறது என்றால், வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவரும் திமுகவால் இயக்கப்பட்டவர்கள் என்பது வெட்டவெளிச்சமானது.


நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மத்திய, மாநில அரசுகள் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதற்கெதிராக போராட்டங்களை நடத்திய, திடீர் போராளிகள், 2021 மே 7-ம் தேதி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் காணாமல் போய்விட்டார்கள். டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பாடல்களைப் பாடி புரட்சி செய்த, ஒரு புரட்சியாளர் இப்போது எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை.


எதிர்க்கட்சியாக இருந்த போது, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த திமுக, பல்வேறு குறுங்குழுக்களையும், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களையும் தூண்டிவிட்டு, அந்த திட்டத்தையே முடக்கியது. இப்போது திமுக ஆட்சியில் இருப்பதால், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முனைகிறார்கள்.


தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒரு படி மேலே போய், “சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை. இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தி, உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தான் சொன்னோம்" என, முழுபூசணிக்காயை அல்ல, ஒரு காய்கறி மார்க்கெட்டையே, சோற்றில் மறைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், இது தகவல் தொழில்நுட்ப யுகம் என்பதால், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர், எட்டு வழிச்சாலைக்கு எதிராக பேசியதை எல்லாம், சமூக ஊடகங்களில் பொதுமக்களே அம்பலப்படுத்தியுள்ளனர்.


இப்படி, திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. அதுமட்டுமல்ல, அதிமுக ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களை முடக்க, பல்வேறு தரப்பினரை தூண்டுவிட்டு, திமுக நடத்திய சதித் திட்டங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இனி மக்களிடம் இருந்து திமுக தப்பிக்க முடியாது. வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாக இருந்ததற்காக மக்களிடம் திமுக மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.