பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 9 ஆண்டுகளாக செய்து வரும் மக்கள் நலப்பணிகள் மற்றும் சாதனைகளை பொதுமக்களை சந்தித்து விளக்கி வருகிறோம். இந்த 9 ஆண்டு காலத்தில் கோவை பகுதிக்கு அதிகமான பயன்கள் கிடைத்துள்ளது. சிறு, குறு தொழில்கள் நிறைந்த கோவை பகுதியில் ராணுவ காரிடர் அமைத்ததன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய துவங்கியுள்ளார்கள். மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உள்கட்டமைப்பு வசதிகள் முன்பு புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
நேற்று பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை வரவேற்கிறோம். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. வன்முறையால் ஒரு இயக்கத்தை முடக்கி விட முடியாது என்பதற்கு பாஜக உதாரணம். நேற்றைய தினம் எங்கள் அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து கதவை தாழிட முயன்றார். அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது. உடனடியாக அங்கிருந்த அலுவலக ஊழியர் விஜயன் அந்த நபரை வெளியேற்றியுள்ள பின்னர், சிறிது நேரத்தில் அந்த நபர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறையில் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் யார்?, எந்த பின்னணியை சேர்ந்தவர்?, அவர் எங்கள் அலுவலகத்திற்கு வந்த நோக்கம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் கண்டறிய வேண்டும்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். அதிமுக தலைவர்களின் விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் நலனுக்காக கட்டமைக்கப்பட்டது. அகில இந்திய தலைமையின் அறிவுரைப்படி சொல்வதை செய்வோம். அதிமுக - பாஜக கருத்து மோதலைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமாராக வருவார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை, மற்றும் அமலாக்க துறை விசாரணை நடத்தி வருகிறது. வருமான வரித்துறை சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனைகள் முழுக்க துறை சம்மந்தப்பட்டது. இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்