உலகெங்கும் இன்று காதலர் தினம் இன்று கோலாலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதிகாலம் தொடங்கி இன்று வரை உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முக்கியமான ஒன்றாக இருப்பது காதல். 


காதல் எனும் முடிவிலி:


மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் மட்டும் முடிவிலியாக இருக்கும். அதில் தவிர்க்க முடியாதது இந்த காதல். காலங்களின் பரிமாணமும், மனிதனனின் வளர்ச்சியும் மாறினாலும் ஒருவர் மீது கொள்ளும் பேரன்பு மட்டும் ஒவ்வொருவராலும் யாரோ ஒருவர் மீது இருந்து கொண்டேதான் இருக்கிறது. 


ஆனால், தொழில்நுட்ப இணையவளர்ச்சி மிகுந்த இந்த காலத்தில் காதல் வயப்படுவது எளிதாகி போனாலும், அந்த காதலை காலத்திற்கும் கொண்டு செல்வது சவாலாக மாறி வருகிறது. அதன் எதிரொலியாகவே இன்று இல்லற வாழ்க்கையில் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 


அதிகரிக்கும் பிரிவுகள்:


விவாகரத்து என்பது மிகவும் சரியான விஷயமே  ஆகும். ஆனால், எதற்காக விவகாரத்து, எதற்காக பிரிவு என்பதே மிக மிக அவசியமானது. தன்னை அடித்து துன்புறுத்துபவரை, தன்னை காெடுமைப்படுத்துபவரை, தன்னை மனதளவில் துன்புறுத்துபவரை என சில நியாயமான காரணங்களுக்காக வாழ்க்கைத் துணையர் இருவர் விவாகரத்து பெற்றுக் கொள்வது, பிரிவது நல்லதே ஆகும். 


ஆனால், இன்று இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் பாதி விவகாரத்து வழக்குகள் மிக மிக சாதாரண காரணங்களுக்காக வருவதாக குடும்ப நல நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 


இடரிலும் தொடரும் உறவு:


எந்தவொரு உறவும் எப்போது இனிப்பாகவே, மகிழ்ச்சியாகவே இருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் இருக்காது. அப்படி இருக்கும்போது காதலர்கள், கணவன் - மனைவி இடையே மட்டும் எப்படி அனைத்து சூழலும் ஒரே மாதிரி அமையும். ஒரு உறவுக்குள் செல்லும்போது மகிழ்ச்சியை ஒன்றாக கொண்டாடுவோம் என்ற மனநிலை இருப்பது போலவே, இடர்களையும், துன்பங்களையும் ஒன்றாகவே எதிர்கொள்வோம் என்ற மனநிலை இருவருக்கும் இருக்க வேண்டும். 


மிகவும் மோசமான காலகட்டத்தில் தன்னுடன் தோள் கொண்டு தோள் நிற்கும் துணை அந்த கடவுளுக்கு நிகரானவராக தனது துணையால் பார்க்கப்படுவார். ஏனென்றால் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாற்றும் ஆற்றல் அவரது துணைக்கு உண்டு. அதனால், நெருக்கடியான காலத்திலும் காதல் துணைக்கு, கணவன் அல்லது மனைவிக்கு துணை நில்லுங்கள். 


சகிப்புத்தன்மை:


இன்றைய காலத்தில் பல விவகாரத்திற்கும், பிரிவிற்கும் மிக மிக முக்கிய காரணமாக இருப்பது சகிப்புத்தன்மையும், விட்டுக்கொடுத்துச் செல்வதும் குறைந்து செல்வதே ஆகும். காதல் என்பதை ஒற்றை வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால்


"ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பதும்...
ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பதும்"


என்பதே ஆகும்.


மறப்போம், மன்னிப்போம்:


கணவன் மனைவி இடையே, காதலர்கள் இடையே சிறு சிறு உரசல்களும், விரிசல்களும் வருவது மிக மிக இயல்பு. அவ்வாறு வரும்போது முதலில் யார் இறங்கி வருவது என்ற ஈகோவிற்குள் செல்லாமல் இருப்பது அவசியம். தவறு தன்மேல் என்று கருதுபவர் தயங்காமல் தன்னுடைய திருத்திக் கொள்ள மன்னிப்பு கேட்பது தவறில்லை. 


தவறை ஒப்புக்கொண்ட பிறகு அதை உடனே மறந்து மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு செல்வதே வாழ்க்கைக்கும் சிறப்பு ஆகும். ஏனென்றால். நீயா? நானா? என்று போட்டி போடுவதற்கு ஒன்றும் கணவன் - மனைவி உறவு, காதல் உறவு என்பது பந்தயம் அல்ல. 


3ம் நபருக்கு நோ:


காலத்திற்கும் இந்த உறவை கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் போட்டி மனப்பான்மையை விடுத்து, சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் காதலர்கள் அல்லது கணவன் -மனைவி இடையே ஒருவர் நல்ல சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்கிறார் என்று மற்றொரு துணை எல்லைமீறி நடந்துகொள்ளவும் கூடாது. 


இல்லற வாழ்விலும் காதல் வாழ்விலும் மிக மிக முக்கியமான விஷயம் தங்களது தனிப்பட்ட விவகாரங்களை நண்பர்கள் மற்றும் வெளி நபர்களிடம் பகிரக்கூடாது. இது என்றுமே ஆபத்தான ஒன்றாகும். உங்களைச் சுற்றி இருக்கும் யார் வேண்டுமானாலும் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். ஆனால், அந்த ஆலோசனைகள் உங்கள் நன்மைக்காகத்தான் இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது. 


மேலும், உங்கள் இடத்தில் இருந்தோ உங்கள் துணை இடத்தில் இருந்தோ உங்களால் மட்டுமே யோசிக்க முடியும். வெளிநபர்கள் அந்த இடத்தில் இருந்து சிந்திப்பது மிகவும் சவாலான மற்றும் கடினமான விஷயம் ஆகும். மேலும், உங்கள் தனிப்பட்ட விவகாரங்களை வெளி நபர்களிடம் அல்லது பொதுவெளியில் பகிரும்போது அது என்றுமே கணவன் மனைவி இடையே மற்றும் காதலர்கள் இடையே மிகப்பெரிய இடைவெளியை அதிகரிக்குமே தவிர, என்றுமே அது உங்கள் இருவருக்கும் இடையேயான அன்யோன்யத்தை அதிகரிக்காது என்பதை எப்போதும் ஆழமாக நினைவில் கொள்ள வேண்டும். 


மனம் விட்டுப் பேசுங்கள்:


பல கணவன் மனைவி இடையே இன்று விவகாரத்தும், பிரிவும் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் மனம் விட்டுப் பேசாமல் இருப்பதே ஆகும். தனது கணவனனுக்கு என்ன சிக்கல், தனது மனைவிக்கு என்ன மன உளைச்சல் என கணவன் மனைவி இருவரும் அமர்ந்து மனம் விட்டுப் பேசினாலே பாதி சிக்கல் தீர்ந்து விடும். 


பொருளாதார தேவைக்காக இன்று ஓடிக்கொண்டே இருக்கும் இந்த உலகில் நாம் மனம் விட்டுப் பேசுவதை காது கொடுத்து கேட்பதற்கு ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள்.  இதுபோன்ற ஒரு மோசமான சூழலை கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கு ஏற்படுத்தும்போதுதான் திருமணத்தை மீறிய உறவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டாகிறது. வாழ்க்கைத் துணைக்கும், குடும்பத்திற்கும் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டுவது மிக மிக அவசியமான ஒன்றாகும். 


இன்றைய சூழலில் காதல் பிரிவுகள் என்பதும் மிக மிக இயல்பான ஒன்றாக மாறிக் கொண்டே போகிறது. காதலில் தனது துணையின் குணாதிசயம் சரியில்லை என்று பிரிவது தவறல்ல. ஆனால், வேறு சில ஏற்க முடியாத காரணங்களால் காதலை முறிப்பதும், வேறு ஒருவரை காதலிப்பதும் காதலுக்கும் ஆரோக்கியமானது அல்லது. 


வாழ்வின் தேடல்:


ஜானி படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். வாழ்க்கையில ஒன்னை விட ஒன்னு எப்பவுமே பெஸ்டாதான் இருக்கும் என்று ஒரு வசனம் இருக்கும். சிறப்பானது என்று எதிலுமே திருப்தி அடைய இயலாது. ஆனால், நமக்கு கிடைத்ததை வைத்து நாம் திருப்தி அடைய இயலும். மேலும், நம் காதல் துணையை அடுத்தவர் எப்படி பார்க்கிறார்? என்பதில் அல்ல நம் காதல். நம் காதலியையோ/ காதலனையோ நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது காதல்.


வாழ்க்கையின் இறுதியில் நாம் அனைவருமே


"யாருக்காவது... யாராவது
இருந்துவிட வேண்டும் என்பதில் 
முடிகிறது 
இந்த வாழ்வின் தேடல்"


என்ற வரிகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கை முடியும். இந்த வாழ்க்கை முழுவதும் நாம் சுமந்து நிற்க ஒருவரின் நினைவுகள் மட்டுமே இருக்கும். நாம் சுமந்து நிற்கும் அந்த நினைவுகளுக்குச் சொந்தக்காரரை ஆழமாகவும், உண்மையாகவும் நேசியுங்கள். காதல் என்பது இறுக்கிப்பிடிப்பது அல்ல. அதே தருணத்தில் விட்டுவிடாமலும் இருக்க வேண்டும்.