மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் வாய்பாய் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி இன்று நாடு முழுவதும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் வாஜ்பாயின் பிறந்தநாளுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும் நமது தலைவர் கலைஞருடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவு கூர்வோம். வலது சாரி கருத்தியல் கொண்டவராக இருந்தாலும் பிரதமர் பொறுப்பில் இருந்த போது நாட்டின் மதச் சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “பாரதத்தின் முன்னாள் பிரதமரும் பாஜக நிறுவனர்களில் ஒருவருமான பாரத ரத்னா, அமரர். அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது பிறந்த நூற்றாண்டு தினம் இன்று. மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான வாஜ்பாய் அவர்கள், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர். பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர். நமது பாரதத்தை அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். கார்கில் போரில் எதிரிகளைத் தோற்கடித்து, நம் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தியவர். சமத்துவம், சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது. தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. தேசத்தின் மீது கொண்ட அன்பால், நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளைக் கருத்தில் கொண்டு, அமரர் வாஜ்பாய் அவர்கள் பிறந்த தினம், கடந்த 2014 ஆம் ஆண்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. அமரர் வாஜ்பாய் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.