மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.
உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பேசிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு,
”நீதிமன்றத்தில் மொழி மிகப்பெரும் சவாலாக உள்ளது. தமிழ் பழம்பெரும் மொழி. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடு மொழியாக்க கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்திய மொழிகள், நீதிமன்றங்களில் பயன்பாட்டில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சியால், வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும்” என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.