கடந்த 9 ஆண்டுகளாக, மத்தியில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் வியூகம் அமைக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்துள்ளார்.


"தமிழ்மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர்"


இந்நிலையில், மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி பேசிய அவர், "தமிழ்மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர். 3ஆவது முறையாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைய உள்ளது.


மத்தியில் ஊழலற்ற சிறப்பான ஆட்சி கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறுகிறது. 2024இல் தமிழ்நாடு மக்களின் ஆசீர்வாதத்துடன் 25 தொகுதிகளை வென்று தர வேண்டும். தமிழ்மொழியின் சிறப்பை மேம்படுத்தும் வகையில் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழர்களின் தொன்மையான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் மோடி.


காசி, குஜராத்தில் தமிழ் மொழியின் பெருமையை பரப்பிவர் பிரதமர் மோடி. திருக்குறள் 23 மொழிகளில் மொழிப்பெயர்க்க காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி. சீன அதிபரை பிரதமர் மோடிதான் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார்.


சிஆர்பிஎஃப், நீட் ஆகிய தேர்வுகளை தமிழில் எழுத பிரதமர் வழிவகுத்தார். கடந்த 2 ஆண்டுகளில் 2352 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.


"எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் ஏன் திறக்கப்படவில்லை என்பதற்கு திமுகதான் பதில் தர வேண்டும்"


கடந்த 9 ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் செலவில் என்.எல்.சி.யில் புதிய திட்டம் செல்படுத்தப்பட உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 84 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்காக 62 லட்சம் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் திட்டம் மூலம் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் ஏன் திறக்கப்படவில்லை என்பதற்கு திமுகதான் பதில் தர வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையை திமுக அரசு கொண்டு வரவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்கள் சேர்ந்து படிக்க தொடங்கிவிட்டனர்.


11 மாவட்டங்களில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். 2ஜி, 3ஜி, 4ஜி ஊழல் செய்தவர்களை தூக்கி எறிந்துவிட்டு தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். 2024 மக்களவை தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மோடி அரசு 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும். ஒரு கோடி ஏழை, எளிய மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.