Amit Shah Tamil Nadu Visit: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பரப்புரை நாடு முழுவதும் இன்றுடன் நிறைவடையவுள்ள சூழலில், ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், அக்கட்சி தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை முடித்துவிட்டு கோயில்களை நோக்கி சென்று தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா வழிபாடு: அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழ்நாடு வந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவரை வழிபட்டு வருகிறார். இதனால், இந்தியாவின் ஒட்டு மொத்த கவனமும் புதுக்கோட்டை மாவட்டத்தை நோக்கி திரும்பியுள்ளது.


கோட்டை பைரவரையும் சத்தியகிரீஸ்வரர் என்ற பெயரில் எழுந்திருக்கும் சிவனையும் தரிசிக்க அமித்ஷா திருமயம் சென்றுள்ளார். உள்ளூர எழும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டவர் பைரவர் என்ற நம்பிக்கை இந்துக்கள் மத்தியில் உள்ளது.


பாதுகாப்பு தந்து, தன்னை வழிபடுபவருக்கு வெற்றியை தரும் சக்தி திருமயம் கோட்டை பைரவருக்கு இருக்கிறது என மக்கள் நம்புகின்றனர். தேர்தல் நடந்து வரும் நிலையில், தான் நினைத்தது நடக்க வேண்டும், தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருமயம் வந்துள்ளார்.


திருமயத்திற்கு அமித்ஷா வர காரணம் என்ன?


கடந்த ஏப்ரல் மாதம், தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் பீகாரில் அமித் ஷா ஹெலிகாப்டரில் புறப்படவிருந்த நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. 


இச்சூழலில், கோட்டை பைரவை பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர்கள் மூலம் கேள்விபட்டு அவரை வழிபட அமித்ஷா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் பயணம் நல்லபடியாக முடிய வரம் கொடுப்பவராக திருமயம் கோட்டை பைரவர் இருக்கிறார் என மக்கள் நம்புகிறார்கள்.


பலரும் தங்களது பயணத்திற்கு முன்னர் இங்கு வந்து சிதறு தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னரே நீண்ட பயணங்களை துவக்குவதை வழக்கமாக வைத்துள்ளர். அப்படி கோட்டை பைரவரை வழிபட்டு சென்றால், பயணங்களின்போது விபத்தோ அல்லது எந்த விரும்பத்தகாத நிகழ்வோ நடைபெறாமல் பாதுகாப்பாய் பைரவர் வருவார் என்பது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே கோட்டை பைரவரை வணங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வந்துள்ளார்.


வாரணாசியில் இருந்து இன்று நண்பகல் 12:20 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 3.05 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அமித் ஷா, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் 3.10 மணிக்கு சிவகங்கை சென்றார். அங்கிருந்து 3:45 மணிக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்ட அவர் மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள சத்தியகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தரிசனம் மேற்கொண்டார்.