மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச் சாலை

சென்னை - புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் வாகன நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் போதிய சாலை விரிவாக்க நடவடிக்கைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்படாமல் இருந்தது. அதே வேலையில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் புதுச்சேரி செல்வதால் அசம்பாவிதங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்வதற்கான வேலைகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (NHAI) ஈடுபட்டுள்ளது. குறிப்பாக 105 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாமல்லபுரம் முதல் புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ஆழியூர் கிராமம் வரையிலான பகுதியில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. அவை 23 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாமல்லபுரம் - முகையூர், 36 கிலோமீட்டர் தூரம் கொண்ட முகையூர் - மரக்காணம், 46 கிலோமீட்டர் தூரம் கொண்ட மரக்காணம் - ஆழியூர் ஆகும். இந்த ஒட்டுமொத்த சாலையும் நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது.

100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லலாம்..!

இந்த சாலை அதிவேக பறக்கும் சாலையாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். இந்த பறக்கும் வழி சாலை செல்லும் பகுதியில் கிராமப்பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களோ அல்லது விபத்துக்களை ஏற்படுத்த கூடிய கால்நடைகள் சாலையின் குறுக்கே செல்ல முடியாத வகையில் சாலையின் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மரக்காணம் - புதுவை இடையே 4 வழிச்சாலை

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மரக்காணம் - புதுவை இடையே 4 வழிச்சாலை அமைக்க கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 2,157 கோடியில் இந்த சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புதிய வருமான வரி சட்ட திருத்த மசோதாவை மாற்றங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்றுவிட்டு, திருத்தப்பட்ட புதிய மசோதாவை தகுந்த நேரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.