நகைக்கடன், பயிர் கடன் தள்ளுபடி.! நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள்- உதயநிதி அதிரடி
Gold and Agricultural Loans Waiver: 2,116 விவசாயிகளின் பெற்ற 13.57 கோடி ரூபாய்க்கான பயிர்க்கடன், 44 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் வாங்கிய சுயஉதவிக்குழு கடன்கள், 3.31 கோடி ரூபாய்க்கான பொது நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நகைக்கடன் , விவசாய கடன் - தேர்தல் வாக்குறுதி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்கட்சியான அதிமுக மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி, சிறுபான்மையினர் கடன் தள்ளுபடி என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கு போட்டியாக திமுகவும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. அந்த வகையில் நகைக்கடன், விவசாய கடன் மற்றும் மாணவர்கள் கல்வி கடன் தொடர்பாக அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. எனவே எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கிய அறிவிப்பு செயல்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கடந்த 2021ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவிற்களுக்கான கடன் தள்ளுபடி என பல அறிவிப்புகளை வெளியிட்டது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும் கடன்கள் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
திருச்சியில் கடன் தள்ளுபடி
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மட்டும் 66,180 விவசாயிகளின் 516.76 கோடி ரூபாய்க்கான பயிர்கடன்களும், 4,129 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 41,781 மகளிரின் 79.60 கோடி ரூபாய்க்கான மகளிர் சுயஉதவிக்குழு கடன்களும், 53,271 பயனாளிகளுக்கு 176.97 கோடி ரூபாய்க்கான பொது நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருந்த போதும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்.எம்.348 கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக காரணங்களால் 31.1.2021 அன்று நிலுவையில் இருந்த விவசாயிகள் பெற்ற பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாததால் விவசாயிகள் புதிதாக பயிர்க்கடன் பெற இயலாமல் இருந்து வந்தனர்.

கடன் தள்ளுபடி ஆணையை வழங்கிய உதயநிதி
இது தொடர்பாக விவசாயிகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்ததன் அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்று தற்போது இச்சங்கத்தில் உள்ள 2116 விவசாயிகளின் 13.57 கோடி ரூபாய்க்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 44 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 541 பெண்கள் பெற்ற 86.48 இலட்சம் ரூபாய்க்கான மகளிர் சுயஉதவிக்குழு கடன்களும், 938 நபர்களுக்கு 3.31 கோடி ரூபாய்க்கான பொது நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புதிய விவசாய கடன் வழங்க ஆணை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும் எம்.எம்.348 கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா 10.00 லட்சம் ரூபாய்க்கான கடன் இணைப்புகளையும், 2 விவசாயிகளுக்கு மொத்தம் 1,87,000 ரூபாய்க்கான விவசாய பயிர்கடன் காசோலைகளையும் வழங்கினார்.























