சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து கடந்த ஒரு வருடமாக ஹேர் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர் - சேலம் - கொச்சின், கொச்சின் - சேலம் - பெங்களூர் விமான சேவை மற்றும் சேலம் - சென்னை மற்றும் சென்னை - சேலம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. 


விமான சேவை ரத்து:


இந்த நிலையில் சேலத்தில் இருந்து கொச்சின் செல்வதற்காக பயணிகள் இன்று சேலம் விமான நிலையம் வந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பாகவே 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர். இந்த விமானம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடையும். அதன் பின்னர் இரண்டு மணிக்கு சேலம் விமான நிலையத்திலிருந்து கொச்சின் விமான நிலையம் புறப்பட்ட செல்லும். ஆனால் இன்று அந்த விமானம் பெங்களூரில் இருந்து ஒரு மணி நேரம் கால தாமதமாக சேலம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் விமானம் வரவில்லை. பின்னர் பெங்களூரில் இருந்து சேலம் வரும் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே விமானம் சேலத்தில் இருந்து கொச்சின் செல்லும். ஆனால் இயந்திர கோளாறு காரணமாக இரண்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 



பயணிகள் போராட்டம்:


இதனால் சேலம் விமான நிலையத்தில் காத்திருந்த 70 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் விமான சேவைக்கு செலுத்திய பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேலம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமான நிலைய காவல்துறையினர் மற்றும் ஓமலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டு பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 


அதிகாரிகள் விளக்கும்:


இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில் பெங்களூரில் இருந்து வரக்கூடிய விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அங்கிருந்து இயக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். அதே விமானம் சேலம் விமான நிலையத்திலிருந்து கொச்சின் செல்லும் என்பதால் அந்த விமான சேவையும் ரத்து செய்யப்பட்டதாக கூறினர். 


இதனால் பயணிகள் 70-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் நிலை உருவானது. ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து பணத்தை வழங்க வேண்டும் என்று கூறி பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.