School leave : புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்: பள்ளிக்கு விடுமுறை! பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரம்! பரபரப்பு தகவல்!
புதுச்சேரியில் த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு விடுமுறை
த.வெ.க. பொதுக்கூட்டம் காரணமாக கூட்ட நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்பதால் உப்பளம் மைதானத்திற்கு அடுத்தே அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகரிப்பால் உருவாகும் சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
த.வெ.க. பொதுக்கூட்டம்
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை டிசம்பர் 9, 2025 தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
விஜய் வருகை அட்டவணை
பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் உரையாற்றுவதற்காகத் த.வெ.க. தலைவர் விஜய், அன்று காலை 8 மணிக்குச் சென்னையில் உள்ள பனையூர் வீட்டில் இருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாகப் புதுச்சேரிக்கு வருகிறார்.
விஜய் காலை 10.30 மணி அளவில் ஹெலிபேடு மைதானத்திற்கு வருகை தந்து, அவரது பிரசார வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். கூட்டம் நிறைவடைந்தவுடன் அவர் மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்னைக்குத் திரும்புவார்.
மைதானச் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
கூட்டத்திற்குப் பொதுமக்கள் ஹெலிபேடு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசார், அவர்களின் 'பாஸ்களைச்' சோதனை செய்த பின்னரே அனுமதி அளிப்பர். த.வெ.க. தலைவர் விஜய் வந்து செல்வதற்குத் தனியாக தற்காலிக நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது.
தற்போது மைதானத்தில் உள்ள பள்ளமான இடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கொட்டிச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்குப் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
போலீசார் விதித்த கட்டுப்பாடுகள்:
மேடை, நாற்காலிக்கு அனுமதி இல்லை என த.வெ.க. பொதுக்கூட்டத்திற்குப் புதுச்சேரி போலீசார் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
முக்கியக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
- பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.
- அனுமதி பெறுபவர்களுக்கு ‘கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட வேண்டும்.
- தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.
- முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.
- பொதுமக்களுக்குக் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.
- நாற்காலிகள் போட அனுமதி இல்லை. மேடையும் அமைக்கக் கூடாது.
- பாதுகாப்புக்காக மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- தொண்டர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரிந்து நிற்கத் தனித்தனித் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
- இந்தக் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகத்திற்குக் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















