தமிழ்நாட்டில் SIR அதாவது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது தேர்தல் ஆணையம். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்த எஸ்ஐஆர் பணிகள் குறித்து தவெக தலைவர் விஜய், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்த பணிகள் எவ்வாறு நடைபெறும் என்றும், மக்கள், அதிலும் குறிப்பாக இளம் தலைமுறை(Gen Z) வாக்காளர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவரது பேச்சின் முழு விவரங்களை பார்க்கலாம்.

Continues below advertisement

SIR பற்றி விஜய் கூறியுள்ளது என்ன.?

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய அரசியல் சாசனம் நமக்கு கொடுத்துள்ள முக்கிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை என தெரிவித்துள்ளார். ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு முக்கிய அடையாளமாக இருப்பது அவரது ஓட்டுரிமை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஓட்டுரிமை நமது உரிமை மட்டுமல்ல, நமது வாழ்க்கையும் அது தான் என தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் குறித்து முதலில் கேள்விப்பட்டபோதே தனக்கும் அதிர்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள விஜய், தான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் யாருக்குமே ஓட்டுப் போடும் உரிமை இல்லை என்று கூறியுள்ள அவர், அதை கேட்டு பயப்பட வேண்டாம், ஆனால் அது தான் உண்மை என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

கொஞ்சம் ஏமாற்ந்தால், நம்மைப் போலவே, லட்சக்கணக்கானோருக்கு ஓட்டுப் போடும் உரிமை இல்லை என்ற நிலை வந்தாலும் வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் எஸ்ஐஆர் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், ஆனால் அதில் யாருக்குமே ஓட்டுப் போடும் உரிமை இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்(BLO) வீடு வீடாகச் சென்று விண்ணப்பத்தை கொடுத்து, அதை நாம் பூர்த்தி செய்து கொடுத்தபின், அதை தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பார்கள் என்று விளக்கியுள்ளார் விஜய். அதை சரிபார்த்தபின் தான், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிடும் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருந்தால் தான் நாம் வாக்களிக்க முடியும் என்று கூறியுள்ள அவர், அந்த புதிய பட்டியல் வெளியாகும் வரை, நாம் வாக்காளர்களா என்பதை உறுதி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அந்த பட்டியலில் நமது பெயர் இல்லை என்றால், அதற்கு தனியாக விண்ணப்பம் கொடுத்து, அது முதலில் இருந்து ஒரு வேலையாக செய்ய வேண்டும் என்றும், இதனால், மக்களுக்கு இதில் பெரும் குழப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இத முக்கியமா செய்யுங்க..“

பிஎல்ஓ-க்கள் வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திரும்பப் பெறும்போது, அனைவரும் மறக்காமல் அவரிடம் அதை பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இருப்போருக்கானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வாக்காளர்கள், அதாவது முதல் முறை வாக்களிப்பவர்கள், Form 6-ஐ பூர்த்தி செய்து, அவரவர்கள் பகுதியில் இருக்கும் அலுவலகத்திலோ அல்லது ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம் என அவர் விளக்கியுள்ளார். மேலும், ஆன்லைனில் பதிவேற்றினால் அதற்கான ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார். மொபைலில் வரும் மெசேஜையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வெளி நாட்டில் இருப்பவர்கள் கூட இதை செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.

SIR மேல் உள்ள சந்தேகங்கள்

இந்த 6.36 கோடி வாக்காளர்களுக்கும் ஒரு மாதத்திற்குள் இந்த விண்ணப்பம் எப்படி சென்று சேரும் என்ற சந்தேகம் உள்ளதாக விஜய் கூறியுள்ளார்.

அதிகாரிகள் வரும்போது, நாம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தால் என்ன ஆகும்.?

இதனால், இதில் பெரிதும் பாதிக்கப்படப் போவது, உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நியாயமான எஸ்ஐஆர் என்றால், ஏற்கனவே உள்ள பட்டியலில், இறந்தவர்களை நீக்க வேண்டும், போலி வாக்காளர்கள் இருந்தால் அதை நீக்க வேண்டும்.

ஆனால், ஏற்கனவே வாக்குரிமை இருப்பவர்கள் எதற்காக புதிதாக பதிவு செய்ய வேண்டும்.?

புதிதாக வரும் வாக்காளர்கள் மற்றும் வாக்குரிமை இல்லாதவர்களை சேர்த்தால் போதாதா.?

இதனால் தான் எஸ்ஐஆரை எதிர்ப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தவெக தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும்

தவெகவினருக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்படுவதில்லை என்று சில புகார்கள் வருவதாக குறிப்பிட்டுள்ள விஜய், அதை யார் செய்கிறார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை என கூறியுள்ளார். அதனால், தவெக தொண்டர்கள், அனைவருக்கும் விண்ணப்பம் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தவெக தொண்டர்கள், தங்களுக்கு மட்டுமில்லாமல், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்களுக்கும் உதவி செய்து, விண்ணப்பம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்கள், அதாவது Gen Z வாக்காளர்கள் தான் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்றும், அதனால் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தலைமுறைதான் முக்கியமான வாக்காளர்கள் என்தால், அவர்களது பெயர்கள் இல்லாமல் இருப்பதற்கு என்ன தில்லுமுல்லு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் நண்பா, நண்பீஸ் உஷாராக இருக்க வேண்டும என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் தேர்தலில் நமது பலத்தை காட்டுவதற்கு பலமான ஆயுதங்களான ஓட்டு, வாக்கு, ஜனநாயகம் ஆகியவற்றை நாம் கையிலெடுக்க வேண்டும் என விஜய் குறிப்பிட்டுள்ளார். அது இருந்தால் தான் வெற்றி என்பதை நாம் அடைய முடியும் என்று கூறியுள்ள அவர், வாக்குச்சாவடியில் தமிழ்நாடே திரண்டு நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர், அதை பார்த்து தமிழ்நாடே தமிழக வெற்றிக் கழகமா அல்லது தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாடா என்று அனைவரும் திகைக்க வேண்டும் என விஜய் கூறியுள்ளார்.