TVK Stampede Death: விஜய் பரப்புரையில் 33 பேர் மரணம்.. கரூருக்கு செல்லும் முதலமைச்சர்!
கரூரில் விஜய்யை பார்க்கச் சென்ற 33 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை கரூர் விரைகிறார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களத்திற்கு புதியவரான நடிகர் விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.
33 பேர் உயிரிழப்பு:
கரூரில் விஜய்யை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் வழிநெடுகிலும் குவிந்தனர். குறிப்பாக, விஜய் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் பரப்புரை வாகனம் அருகே ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர்களும், அதிகாரிகளும் குவிந்து வருகின்றனர்.
முதலமைச்சர் கவலை:
இந்த சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கரூர் மருத்துவனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். மயக்கம் அடைந்தும், மூச்சுத்திணறலில் சிக்கியும் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கரூர் வரும் மு.க.ஸ்டாலின்:
அமைச்சர்கள், அதிகாரிகளை சம்பவ இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு நாளை செல்ல உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற உள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியும் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 16 பேர் பெண்கள் என்று கூறப்படுகிறது. சிறுமிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தால் கரூர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
T





















