தமிழ்நாட்டிற்கு மட்டுமன்று; புதுச்சேரிக்கும் நான் குரல் கொடுப்பேன்! விஜய்
சுமார் 20 லட்சம் பேர் வாழக்கூடிய யூனியன் பிரதேசமான புதுச்சேரி, மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை - விஜய்

புதுச்சேரி: நான் மறுபடியும் சொல்கிறேன், இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்போதும் துணை நிற்பேன். வரும் புதுச்சேரி தேர்தல் களத்தில் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என விஜய் பேச்சு.
தேர்தல் களத்தில் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும்
புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களிடையே பேச்சு.
என் நெஞ்சில் குடியிருக்கும்... புதுச்சேரி மக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இந்த ஒன்றிய அரசிற்கு தான், தமிழ்நாடு தனி மாநிலம். புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம். அவங்களுக்குதான் தமிழ்நாடு தனி, புதுச்சேரி தனி என இருப்பார்கள். ஆனால் நமக்கெல்லாம் அப்படி கிடையாது. நாமெல்லாம் வேறு வேறு கிடையாது. நாம் எல்லாரும் ஒன்னுதான். தமிழ்நாடும் புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் எல்லாரும் ஒன்னுதான். நாம் எல்லோரும் சொந்தம்தான். வேற வீட்டில், வேற ஊரில் வேற நாட்டில், வேற மாநிலத்தில் இருப்பதினால் நாம் எல்லாரும் சொந்தங்கள் இல்லை என ஆகிவிட முடியுமா? அது எப்படி முடியும். ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கொள்ளும்போது அந்தப் பாச உணர்வு அதுதான், அது மட்டும்தான். அது இருந்தாலே போதும். வேறெதுவும் தேவையில்லை. அதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமில்லை உலகத்தின் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லோருமே நம்முடைய உயிர்தான்;அவர்கள் எல்லோருமே நம்முடைய உறவுதான்.
புதுச்சேரி என்றாலே மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா இவைதான் உடனே ஞாபகத்திற்கு வருவார்கள். அதுமட்டுமல்ல மகாகவி பாரதியார் அவர்கள் இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த மண் என இன்னும் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அரசியல் என வந்துவிட்டால் முக்கியமான விஷயத்தை பற்றி நம்ம சொல்லியே ஆக வேண்டும்.
அதிமுக ஆட்சி அமைத்தது முதலில் புதுச்சேரி தான்!
1977இல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்பே 1974ஆம் ஆண்டிலேயே இங்கே புதுச்சேரியில் அவருடைய ஆட்சி அமைந்தது. அதனால் தான் நமக்காக வந்தவர் எம்ஜிஆர் அவரை தமிழ்நாட்டில் கை விட்டு விடாதீர்கள் என அன்றே நமக்கு எச்சரிக்கை கொடுத்ததே புதுச்சேரிதான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மால் மறக்க முடியுமா?
அதுமட்டுமில்லை தமிழ்நாடு மாதிரியே புதுச்சேரி மக்களும் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதனால் இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பேன் என நினைக்காதீர்கள். அப்படி செய்தால் அது தவறு. புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பேன். அது என்னுடைய கடமையும் கூட. அதனால்தான் இங்கே நீங்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை பற்றி பேச வந்திருக்கிறேன்.
புதுச்சேரி முதல்வருக்கு நன்றி கூறிய விஜய்
அதுமட்டுமில்லை இந்த புதுச்சேரி அரசைப் பற்றி சொல்ல வேண்டும். இது கண்டிப்பாக தமிழ்நாட்டில இருக்கிற திமுக அரசைப் போல கிடையாது. ஏனென்றால் வேறு ஒரு அரசியல் கட்சி நடத்துகிற நிகழ்ச்சியாகவே இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசு நடந்துகொண்டுள்ளது. அப்படிப்பட்ட இந்த புதுச்சேரி அரசுக்கும் புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதை பார்த்து தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள். பரவாயில்லை வரும் தேர்தலில் 100% கற்றுக்கொள்வார்கள். அதனை நமது மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
மாநில அந்தஸ்து
புதுச்சேரி அரசின் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்ளவில்லை என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கு நன்றாகவே தெரியும். மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டும் கண்டுகொள்ளவில்லை. இங்கே வளர்ச்சி ஏற்படுவதற்கும் துணை நிற்கவே இல்லை என கேள்விப்படுகிறோம். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்டு பலமுறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஆண்டுகூட மார்ச் மாசம் 27ஆம் தேதி, 2025 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்புகிற 16வது தீர்மானம்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரைக்கும் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுடைய வேலை வாய்ப்பிற்காக எதையுமே செய்யவில்லை. இங்கே ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அதைப்பற்றி யார் பேசினாலும் அது அவர்களுடைய காதில் விழவில்லை.
இங்கே ஒரு அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டினால் பதவியை விட்டு நீக்கி அந்த இடத்திற்கு இன்னொருவரை நியமித்து 200 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவருக்கென ஒரு இலாக்காவை ஒதுக்கவில்லை. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துவது என அந்த மக்களே சொல்கிறார்கள். புதுச்சேரியின் முக்கிய அங்கமாக இருக்கிற காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் எல்லாம் முன்னேற்றமே இல்லை என அந்தப் பகுதி மக்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் பகுதியை மொத்தமாக கைவிட்டது போல் இருக்கிறது. இவை எல்லாம் முன்னேற்றம் அடைய வேண்டும்.
சுற்றுலா தலங்களை விரிவுபடுத்த வேண்டும்
முக்கிய சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதி இல்லை. போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லை. இவற்றையெல்லாம் மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி - கடலூர் மார்க்கமாக ரயில் திட்டம் வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டும், திமுகவை நம்பாதீர்கள். உங்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் அவர்களின் வேலையே. நான் கூறிய பல கோரிக்கைகளை எல்லாம் தீர்த்து வைப்பதற்கு புதுச்சேரி அரசுக்கும் அதனுடைய மக்கள் திட்டங்களுக்கும் மிக அக்கறையாக உண்மையாக துணை நிற்க வேண்டும். தமிழ்நாட்டை ஒதுக்குவது போல் புதுச்சேரியையும் ஒதுக்க கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை!
சுமார் 20 லட்சம் பேர் வாழக்கூடிய யூனியன் பிரதேசமான புதுச்சேரி, மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையிலும் யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கென தோராயமாகவே மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. அந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட திட்டச்செலவுகளுக்கே சென்று விடுவதால் மற்ற தேவைகளுக்கு வெளிச்சந்தையில் கடன் பத்திரங்களை கடன் வாங்குகிறது புதுச்சேரி அரசு.
இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் ஒரே வழி மாநில அந்தஸ்து எனும் புதுச்சேரி மக்களுடைய பல்லாண்டு கால கோரிக்கை.
புதுச்சேரிக்கென போதுமான நிதிவரத்து இல்லாததால் வெளியே கடன் வாங்க வேண்டியுள்ளது. புதுச்சேரியின் கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது இல்லையா? தொழில் வளர்ச்சியும் மிகத்தேவையான விஷயம். புதுச்சேரியை தென்னிந்தியாவின் முன்னணி தொழில்நகரமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களில் இருப்பது போல இங்கேயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் என அனைத்து பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும். இறுதியாக மீன்பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துவிடுகிறது. அதனால் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படு மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
நான் மறுபடியும் சொல்கிறேன், இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்போதும் துணை நிற்பேன். வரும் புதுச்சேரி தேர்தல் களத்தில் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என விஜய் பேச்சு.





















